மா சீசன் முடிந்ததால் தென்னையை சேதப்படுத்தும் யானைகள்
மா சீசன் முடிந்ததால் தென்னையை சேதப்படுத்தும் யானைகள்
UPDATED : ஜூலை 18, 2026 04:26 AM
ADDED : ஜூலை 17, 2026 07:12 PM
ராஜபாளையம், ஜூலை 18-
ராஜபாளையம் பகுதியில் மா அறுவடை முடிந்த நிலையில் உணவு தேடி வரும் காட்டு யானைகள் தென்னை மரங்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் முதல் அய்யனார் கோயில் ஆறு, கல்லாறு ஓடை, பண்டாரப்பாறை, புரசம்பாறை, ஆறாவது மைல் நீர்த்தேக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் தென்னை, மா விவசாயம் நடைபெற்று வருகிறது.
வழக்கத்தை விட இந்த ஆண்டு யானைகள் தோப்புகளில் புகுந்து சேதப்படுத்துவது அதிகரித்த நிலையில் மா அறுவடை முழுமையாக முடிந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் வறட்சி காரணமாக உணவு தேடி வரும் காட்டு யானைகள் தற்போது தென்னைகளை சேதப்படுத்துவது அதிகரித்துள்ளது.
கடந்த மூன்று நாட்களாக ஆறாவது நீர் தேக்கம் அருகே வீரு என்பவர் குத்தகை தோப்பில் 2 குட்டி 3 பெரிய யானைகளுடன் புகுந்த யானை கூட்டம் 30-க்கும் அதிகமான தென்னை மர குருத்துகளை பிடுங்கி சேதப்படுத்தி உள்ளது.
இதே நிலை அருகில் உள்ள கணேசராஜா, தேவேந்திர ராஜா, கண்ணன் உள்ளிட்டோரின் தோப்புகளிலும் மா மர கிளைகளையும் ஒடித்துள்ளது.
மலையடிவாரத்தில் உள்ள அகழிகளை பராமரித்து வனப்பகுதிக்குள் விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விட்டுள்ளனர்.
