ADDED : ஏப் 26, 2024 01:04 AM
சாத்துார் : ஏழாயிரம்பண்ணை அருகே மக்காச்சோளம் காட்டில் ஏற்பட்ட தீ பரவி அருகில் உள்ள கொய்யாத்தோப்பும் தீயில் கருகியது.
ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ஜோதிபாசு இவரது நிலத்தில் மக்காச்சோளம் பயிர் செய்தார். அறுவடை முடிந்த நிலையில் மீதம் இருந்த சோளத்தட்டைக்கு நேற்று மதியம் 11:00 மணிக்கு தீ வைத்தார்.
காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென காடு முழுவதும் பரவியது. பின்னர் சாமித்தேவன்பட்டியை சேர்ந்த சியான்சந்த் என்பவருக்கு சொந்தமான கொய்யாத்தோப்பிலும் தீ பற்றியது. இதனால் கொய்யா மரங்களும் கொய்யா மரங்களுக்காக அமைக்கப்பட்ட சொட்டு நீர் பாசன குழாய்களும் தீயில் கருகின. ஏழாயிரம்பண்ணை தீயணைப்பு மீட்புத்துறையினர் 2 மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை அணைத்தனர்.
கோடைக்காலத்தில் அறுவடைக்கு பின் எஞ்சியுள்ள சோளத்தட்டைகளுக்கு தீ வைக்காமல் உழவு செய்து அதனை மண்ணோடு மக்கச் செய்தால் இது போன்ற விபத்துக்கள் நேரிடாது என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

