/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உள்ளாட்சிகளில் திடக்கழிவு மேலாண்மையை பின்பற்ற அறிவுறுத்தல்: அமல்படுத்தாவிடில் நடவடிக்கை என எச்சரிக்கை
/
உள்ளாட்சிகளில் திடக்கழிவு மேலாண்மையை பின்பற்ற அறிவுறுத்தல்: அமல்படுத்தாவிடில் நடவடிக்கை என எச்சரிக்கை
உள்ளாட்சிகளில் திடக்கழிவு மேலாண்மையை பின்பற்ற அறிவுறுத்தல்: அமல்படுத்தாவிடில் நடவடிக்கை என எச்சரிக்கை
உள்ளாட்சிகளில் திடக்கழிவு மேலாண்மையை பின்பற்ற அறிவுறுத்தல்: அமல்படுத்தாவிடில் நடவடிக்கை என எச்சரிக்கை
ADDED : ஜூலை 25, 2024 03:54 AM
விருதுநகர் மாவட்டத்தில்இன்று வரை அனைத்து ஊராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் கேள்விக்குறியாக தான் உள்ளது. பல ஊராட்சிகளில் கட்டப்பட்ட உரக்கூடங்கள் சிதிலமடைந்து மோசமான நிலையில் உள்ளன. குப்பையை கொட்டுவதற்கு, அதை பிரிப்பதற்கு போதிய வசதிகள் இல்லாத சூழல் உள்ளது.
2016 திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் படியும், ஒவ்வொரு ஊராட்சிகளும் முறையாக திடக்கழிவு மேலாண்மை செய்வதற்கு விதிமுறைகள் வகுக்கப்பட்டு பல லட்ச ரூபாய்களில் நிதி ஒதுக்கி அதற்குரிய உபகரணங்கள் வாங்கப்பட்டும், அதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் ஊராட்சிகளில் துாய்மை பணிகள்,குப்பையை முறைப்படி அகற்ற முன்னுரிமை அளிப்பதில்லை. இதனால் உபகரணங்கள் துருபிடித்து பாழாகும் நிலைஏற்பட்டு வருகிறது. குப்பை சேர்ந்தால் அவற்றை எரிப்பதில் மட்டும் மும்முரம் காட்டுகின்றனர்.
கடந்த ஆண்டு ஊராட்சிகளின் கூட்டங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில்இது தொடர்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக செயல் அலுவலர்களுக்கு திடக்கழிவு மேலாண்மையை முறையாக செய்ய வேண்டியது சட்டப்பூர்வமான கடமை என வலியுறுத்தப்பட்டுஉள்ளது.
இந்நிலையில் கலெக்டர் கள ஆய்விற்கு சென்ற பல ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை முறையாக செயல்படாமல் இருப்பது தெரிந்தது. ஆங்காங்கே குப்பை கொட்டியும், அசுத்தமாகவும், சுகாதார கேடாகவும் இருந்தது. இதனால் மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இதுகுறித்து கலெக்டர்ஜெயசீலன், ஊராட்சி நிர்வாகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல், விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்தல், முறையாக குப்பையை பெற்று அவற்றை உரிய இடத்தில் சேர்த்தல் போன்ற அடிப்படை பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை குறித்து பலமுறை வலியுறுத்திய பிறகும், உள்ளாட்சி அமைப்புகள் இதில் மெத்தனமாக இருப்பது வருத்தத்திற்குரியது.
எனவே உடனடியாக ஊராட்சி பகுதிகளில் முழுமையாக குப்பையை அகற்றி, அவற்றை முறையாக பிரித்து பராமரிப்பு செய்ய வேண்டும். அதற்காக பொது நிதியை முன்னுரிமைப்படுத்தி பயன்படுத்த வேண்டும்.
இனி வரும் காலங்களில் திடக்கழிவு மேலாண்மையை முழுமையாக, முறையாக பின்பற்றாத ஊராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள் மீது சுற்றுச்சூழல், திடக்கிழவு மேலாண்மை சட்ட பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

