ADDED : மார் 29, 2024 05:49 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை பாண்டுரங்கன் கோயில் பகுதியில் நடை பாதையில் மாட்டுசாணி கழிவுகளை கொட்டியும் சமூக விரோத செயல்களின் கூடாரமாகும் சேதமான அரசு கட்டடம் உட்பட பல்வேறு பிரச்னைகளில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர்.
அருப்புக்கோட்டை நகராட்சி 32வது வார்டை சேர்ந்தது பாண்டுரங்கன் கோயில் பகுதி. கோயிலை சுற்றி தம்மாந்தெரு, கீரைபட்டி தெரு, சண்முகம் தெரு, சங்கு மணி தெரு உட்பட, தெருக்கள் உள்ளன. பழமையான கோயில் என்பதால் ஏராளமான மக்கள் வந்து செல்லும் பகுதியாக உள்ளது பகுதியாக உள்ளது.
கோயிலுக்கு வரும் மெயின் தெரு பல பகுதிகளில் சேதம் அடைந்தும், தெருவின் இருபுறமும் வாறுகால் இன்றி உள்ளது.
இதனால் மழைக்காலங்களில் மழைநீர் போக வழி இன்றி தெருவில் தேங்கி தாழ்வான வீடுகளுக்குள் சென்றுவிடுகிறது.
கோயில் சுற்றும் புறம் சுகாதார கேடாக உள்ளது கோயில் அருகில் உள்ள பாதையில் மாடு வளர்ப்பவர்கள் சாணங்களை குவியல் குவியலாக கொட்டுகின்றனர்.
இதனால் பாதையில் நடக்க முடியாமல் துர்நாற்றமும் எடுக்கிறது கோயில் அருகில் வருவாய் துறைக்கு சொந்தமான கட்டடம் 30 ஆண்டுகளுக்கு மேலாக இடியும் நிலையிலும், பயனின்றியும் உள்ளது. இரவு நேரங்களில் கட்டடம் சமூக விரோதிகள் கூடாரமாகவும், குடிமகன்களின் பாராகவும் செயல்படுகிறது.
கட்டடத்தை இடிக்க வருவாய் துறையினரிடம் பலமுறை கோரிக்கை வைத்து நடவடிக்கை இல்லை.
பாண்டுரங்கன் கோயில், மாரியம்மன் கோயில், ஐயப்பன் கோயில் என, கோயில்களாக இருக்கும் இந்த பகுதி சுகாதார கேடாக உள்ளது சுகாதார கேடாக உள்ளது.
பாண்டுரங்கன் கோயில் அருகில் நகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது இதில் சமுதாயக்கூடம் ரேஷன் கடை கட்ட இந்த பகுதி வார்டு கவுன்சிலர் ராமதிலகம் பலமுறை நகராட்சி கூட்டத்தில் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை.
தம்மாந்தெருவில் ஒரு பொது அடிகுழாய் அமைக்க வேண்டும். எஸ்.பி.கே., கல்லூரி சாலையிலிருந்து, பூக்கடை பஜார், சத்தியமூர்த்தி பஜார், பாண்டுரங்கன் கோயில் அருகில் உள்ள பிரதான ஓடை வழியாக மழைநீர் பெரிய கண்மாய்க்கு செல்லும். 30 அடியாக இருந்த ஓடை ஆக்கிரமிப்பில் 3 அடி ஓடையாக மாறிவிட்டது.
ஓடை பராமரிப்பு இன்றி புதர்களும் செடி கொடிகளும் வளர்ந்து பல பகுதிகளில் அடைப்பும் உள்ளதால் மழை நீர் சரிவர செல்ல முடியாமல் பஜார் பகுதிகளில் தேங்கி விடுகிறது.
பட்டாபிராமர் கோயில் மெயின் தெரு வழியாக தெற்கு தெருவிற்கு செல்லும் பாதை உள்ளது. இதில் குப்பைகளையும், கழிவுகளையும் கொட்டுவதால் நடக்க முடியாமல் உள்ளது.
பாம்புகள் வாழும் அரசு கட்டடம்
அருண்குமார், தனியார் ஊழியர்: பட்டாபிராமர் கோயில் பகுதியில் பல ஆண்டுகளாக பயனின்றி சேதமடைந்த அரசு கட்டடம் உள்ளது. முட்புதர்கள் சூழ்ந்த இந்த கட்டடம் பாம்புகள், விஷ பூச்சிகள் வாழும் இடமாக உள்ளது. இரவு நேரங்களில் இந்தப் பகுதியாக வழியாக நடந்து செல்ல முடியாது. கோயிலுக்கு வருபவர்கள் இங்குதான் தங்கள் வாகனங்களை நிறுத்த வேண்டியுள்ளது. கட்டடத்தை இடித்து மக்களுக்கு பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரோடு வேண்டும்
ஜெகதீஸ்வரன், டிரைவர்: பட்டாபிராமர் கோயில் தெருவில் வர்த்தக நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஜவுளி கடைகள், கோயில்கள் என உள்ளது. பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லக்கூடிய பகுதி இது. ஆனால் மெயின் ரோட்டில் இருந்து தெருவிற்குள் வரும் ரோடு சேதம் அடைந்துள்ளது.
இரு பக்கமும் வாறுகால் இல்லை. மழைக்காலங்களில் வெள்ளம் தேங்கி விடுகிறது. இருபுறமும் வாறுகால் அமைத்து புதியதாக ரோடு அமைக்க வேண்டும்.
கோரிக்கை வைத்தால் நடவடிக்கை இல்லை
ராமதிலகம், கவுன்சிலர்: பட்டாபிராமர் கோயில் அருகில் நகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. இதில் இந்த பகுதி மக்களுக்கு என ஒரு பூங்கா அமைக்க கோரிக்கை வைத்துள்ளேன்.
மேலும் சமுதாயக்கூடம், ரேஷன் கடை அமைக்க தேவையான நகராட்சி இடம் கோயில் அருகில் உள்ளது. பாழடைந்த அரசு கட்டடத்தை இடிக்க சொல்லி வலியுறுத்தி வருகிறேன். ஆனால் எந்தவித கோரிக்கையும் நிறைவேற்றாமலேயே உள்ளனர்.

