அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி பகுதியில் குடிநீர், வாறுகால், ரோடு வசதிகள் இல்லாமல் பல ஆண்டுகளாக மக்கள் அவதிப்படுகின்றனர்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பாலையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது நாடார் கிழக்கு பகுதி. இங்கு 3க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.
பாலையம்பட்டி மெயின் ரோடு அருகில்அமைந்துள்ள இந்த பகுதிக்கு எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லை. மற்ற பகுதிகளுக்கு தாமிரபரணி, ஜல் ஜீவன் குடிநீர் என விநியோகம் இருந்தும், கிழக்கு பகுதிக்கு குடிநீர் வசதிகள் இல்லை.
ஊராட்சி குடிநீர் எப்போதாவது வரும். ஜல் ஜீவன் திட்டத்தில் குழாய்கள் அமைக்கப்பட்டும் காட்சி பொருளாக உள்ளது. புறநகர் பகுதிகளுக்கு இந்த திட்டத்தில்தண்ணீர் வருகிறது. எங்கள் பகுதிக்கு மட்டும் வர மறுக்கிறது என இப்பகுதி பெண்கள் புகார் கூறுகின்றனர்.
தெருக்களில் வாறுகால் சேதமடைந்தும், அடைபட்டும் கழிவுநீர் வெளியேற முடியாமல் உள்ளது. தெருக்களில் ரோடுகள் இன்றி மேடும், பள்ளமுமாக உள்ளது. இரவு நேரங்களில் வயதானவர்கள் தடுமாறி செல்ல வேண்டியுள்ளது. இருக்கின்ற வாறுகாலை துப்புரவு செய்ய பணியாளர்கள் வருவது இல்லை. கழிவுநீர் ஆங்காங்கு தேங்கி கிடப்பதால் சுகாதார கேடாக உள்ளது.
மெயின் ரோட்டில்இருந்து கிழக்கு பகுதிக்கு செல்லும் ரோடு குறுகலாகஉள்ளது. ஊராட்சியில் கோரிக்கை வைத்தாலும்கண்டு கொள்வது இல்லை. ஜல்ஜீவன் குடிநீர் திட்டத்திற்கு இப்பகுதியினர் டெபாசிட் தொகை கட்டி பல மாதங்களாக காத்துஇருக்கின்றனர்.
குடிநீர் இல்லை
மகமாயி, குடும்ப தலைவி: கிழக்கு பகுதியில் குடிநீர் வருவது இல்லை. நாங்கள்பல ஆண்டுகளாக குடிநீரை விலை கொடுத்து தான் வாங்குகிறோம். 1 குடம் குடிநீர் 12 ரூபாய் கொடுத்து வாங்குகிறோம். ஊரின் மைய பகுதியில் இருந்தும் எங்களுக்கு குடிநீர் வசதி இல்லை. ஜல் ஜீவன் குடிநீர் இணைப்பிற்கு பணம் கட்டி பல மாதங்களாக காத்திருக்கிறோம்.
வாறுகால் இல்லை
பரமேஸ்வரி, குடும்ப தலைவி: தெருக்களில் இருக்கின்ற வாறுகால்கள் சேதமடைந்து கழிவுநீர் வெளியேற முடியாமல் உள்ளது. இவற்றை துப்பரவுசெய்ய பணியாளர்கள் வருவது இல்லை. கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது. புதியதாக வாறுகால் அமைத்து கழிவுநீர் சீராக செல்லும் வகையில் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பி.டி.ஓ., க்கள் ஊராட்சிக்கு அறிவுறுத்த வேண்டும்.
ரோடு இல்லை
பகவதி, குடும்பதலைவி: கிழக்கு பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள்எதுவும் இல்லை. தெருக்கள் மேடும், பள்ளமுமாக உள்ளது. நடக்க முடியவில்லை. மழை காலங்களில் தண்ணீர் தேங்கி விடுகிறது. ஊராட்சி புதியதாக எங்கள் பகுதிக்கு ரோடு அமைக்க வேண்டும். பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை.

