ADDED : ஜூன் 27, 2024 11:56 PM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே குலசேகரநல்லூரில்கண்மாய் பராமரிப்பு இன்றி விவசாயம் பாதிப்பதாலும், கட்டப்பட்டுள்ள அரசு கட்டடங்கள் பயன்பாடு இன்றி சேதம் அடைந்தும் உள்ளது.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்ததுகுலசேகரநல்லூர் ஊராட்சி. இதில், மடத்துப்பட்டி மஞ்சம்பட்டி மேல கண்டமங்கலம் உள்ளிட்ட கிராமங்கள் அடங்கியுள்ளது. ஊரின் மெயின் வாறுகால் அடைபட்டும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும் உள்ளதால் கழிவுநீர், மழைநீர் தேங்கி சுகாதார கேடாக உள்ளது.
மெயின் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நேரம் கழிவு நீரும் தனித்தனியாக செல்லும் வகையில் ஓடையை புதுப்பிக்க வேண்டும். பல தெருக்களில் வாறுகால் இன்றி கழிவுநீர் தேங்கியும், ஒரு சில தெருக்களில் வாறுகால்கள் சேதமடைந்தும் உள்ளது.
ஊரின் நடுவில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலை தொட்டி பயன்பாடின்றி சேதமடைந்து கிடக்கிறது. இதை இடித்துவிட்டு புதிய மேல்நிலைத் தொட்டி கட்ட வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.
15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஊராட்சி கழிப்பறை பயன்படாமல் உள்ளது. சமுதாய நலக்கூடம் பராமரிப்பு இன்றி, கழிப்பறைகள் பயன்படுத்த முடியாமலும், கட்டடம் சேதமடைந்தும் உள்ளது. ஊரில் உள்ள பயணிகள் நிற்க நிழல்குடையில் நிற்க கூட முடியாத அளவிற்கு உள்ளது.
செல்லங்குளம் கண்மாய் பராமரிப்பின்றி சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. மழைநீர் வரத்து ஓடைகள் அடைபட்டு போனதால் கண்மாய்க்கு தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கு மேல் பட்ட மாணவர்கள் வெளியூர்களுக்கு படிக்க செல்கின்றனர். இவர்கள் பள்ளி நேரங்களில் வந்து செல்ல போதுமான பஸ் வசதி இல்லை.
பயன்படாத அரசு கட்டடங்கள்
நாகேந்திரன், விவசாயி: சமுதாயக்கூடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் பராமரிப்பின்றி சேதமடைந்து விட்டது. இதேபோன்று 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஊராட்சி பொது கழிப்பறையும் பயன்பாடு இன்றி உள்ளது. அரசு மூலம் கட்டப்படும் கட்டடங்களை முறையான பராமரிப்பு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
வாறுகால் வசதி
பாண்டியன், விவசாயி: ஊராட்சி அலுவலகம் உள்ள இடத்திற்கு நடுவே கழிவுநீர் வாறுகால் மற்றும்நீர் பிடிப்பு இடங்கள் உள்ளது. இவற்றை பராமரிக்காததால் கண்மாய்க்கு தண்ணீர் வரத்து இல்லாமல் போய்விட்டது.
கழிவு நீரும் வெளியே செல்ல முடியாமல் மெயின் ரோட்டில் தேங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுஉள்ளது. மழைநீர், கழிவுநீர் செல்ல தனித்தனியாகவாறுகால் அமைக்க வேண்டும்.
மைதானம் வேண்டும்
நிதிஷ்குமார், மாணவர்: எங்கள் ஊர் மாணவர்கள் பாரம்பரியமாக கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் தனியாக குழு அமைத்து மாவட்ட, மாநில அளவில் பரிசுகளை பெற்றுள்ளனர். எங்கள் ஊரில் கால்பந்து மைதானம் அமைத்து தர அரசு முன் வர வேண்டும். மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்கப்படுத்த வேண்டும்.