ADDED : ஆக 09, 2024 12:20 AM

விருதுநகர்: விருதுநகர் மாத்தநாயக்கன்பட்டி ரோட்டில் பாழடைந்த நகராட்சி எடை மேடை நிலையத்தை சீரமைத்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
விருதுநகர் நகராட்சி 36 வார்டுகளில் 25 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. இதில் 1 லட்சம் பேர் வரை வசிக்கின்றனர். இங்குள்ள 5 சுகாதாரப் பிரிவு மூலம் குப்பை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த காலங்களில் நகராட்சி ஊழியர்கள் வீடு, வீடாகச் சென்று சேகரிப்பர்.
பின்பு அவற்றை நகராட்சி வாகனங்களில் ஏற்றி விடுவர். அவை மாத்தநாயக்கன்பட்டி ரோட்டில் வி.வி.ஆர்.காலனி அருகே நகராட்சிக்கு சொந்தமான எடை நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும். அங்குள்ள நகராட்சி ஊழியர்கள், வாகனத்தின் எடை போக, மீதமுள்ள குப்பையின் எடை கணக்கில் எழுதிக் கொள்வது வழக்கம். இவ்வாறு அனைத்து வாகனங்களில் வரும் குப்பை கணக்கீடு செய்யப்பட்டு வந்தது. 2000ல் திறக்கப்பட்ட இந்த எடைமேடை 20 மெ.டன் வரை ஒரே நேரத்தில் எடை போடும்.
கடந்த சில ஆண்டுகள் வரை இந்த எடை நிலையம் செயல்பட்டு வந்தது. ஆனால் சரிவர பராமரிப்பு பணிகள் செய்யாததால் தற்போது செயல்படாது பாழடைந்த கட்டடமாக மாறியுள்ளது.
தற்போது விருதுநகர் நகராட்சியில் தனியார் மூலம் குப்பை சேகரிக்கும் பணிகள் நடக்கிறது. இவர்கள் தனியார் எடை நிலையத்தில் தாங்கள் சேகரிக்கும் குப்பையை எடை போட்டு கணக்கு எழுதி அதற்கு ஏற்ப நகராட்சியில் பணத்தை பெற்று வருகின்றனர். முன்பு குப்பை சேகரிக்கும் பணி தனியாரிடம் இருந்த போது, எடை போடுவதில் முறைகேடுகள் நடந்தன.
இதையடுத்து ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. பின்பு நகராட்சி ஊழியர்கள், மகளிர் குழுக்கள் மூலம் சுகாதாரப் பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன. இந்நிலையில் நகராட்சிக்கு சொந்தமான எடை மேடையை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அங்கு குப்பையை எடை போட வேண்டும்.
அவ்வாறு செய்யும் பட்சத்தில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்க முடியும். இதை கருத்தில் கொண்டு எடைமேடையை பராமரித்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.