/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் லாரி முனையம் அமைக்க வேண்டும்
/
சிவகாசியில் லாரி முனையம் அமைக்க வேண்டும்
ADDED : பிப் 28, 2025 07:15 AM
சிவகாசி: சிவகாசியில் லாரி முனையம் அமைக்க வேண்டுமென தமிழ்நாடு அனைத்து தொழிலதிபர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர், சங்க தலைவர் முத்துரத்தினம், பொதுச் செயலாளர் ஜெயபால், செயலாளர் தர்மராஜ், இணை செயலாளர் ஜெயசங்கர், கலெக்டர் ஜெயசீலனிடம் கொடுத்த மனு:
சிவகாசி மாநகராட்சிக்கு தினமும் 300 க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள், 50 க்கும் மேற்பட்ட கன்டெய்னர் வாகனங்கள் வந்து செல்கின்றன. தொழில் நிறுவனங்களுக்கான மூலப் பொருட்களை வெகு தொலைவில் இருந்து கொண்டு வரும் வாகனங்கள் சரக்குகளை இறக்கிய பின்பு இங்கிருந்து தீப்பெட்டி பட்டாசு அச்சு பொருட்கள் பெட்டிகள் காகிதம் மற்றும் அட்டைகள் வெளியூர்களுக்கு ஏற்றி செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதால் பெரும்பாலான வாகனங்கள் ஒன்றிரண்டு நாட்கள் சிவகாசி பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு காத்திருக்கின்றன.
சிவகாசியில் லாரி முனையம் இல்லாததால் காத்திருக்கும் வாகனங்கள் பெரும்பாலானவை போக்குவரத்து நிறைந்த பகுதிகளான திருத்தங்கல் ரோடு சிறுகுளம் கண்மாய் கரை ரோடு சாத்துார் ரோடு வெம்பக்கோட்டை ரோடு என ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்படுகின்றது. இதனால் காலை மாலை நேரங்களில் பள்ளி கல்லுாரி வாகனங்கள் செல்வதிலும் டூவீலரில் செல்லும் மாணவர்கள், தொழில் நிறுவனங்களுக்கு பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், அலுவலர்கள் என அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
2021 ல் சிவகாசி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பின்பு கட்டமைப்பை மேம்படுத்துதல், சாட்சியாபுரம் மேம்பாலம், சுற்று வட்ட சாலை என பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடந்து வந்தாலும் தொழில் நகராகிய இங்கு லாரி முனையம் இல்லாதது மிகப்பெரிய குறையாகவே உள்ளது. எனவே இங்கு லாரி முனையம் அமைக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
எஸ்ஸென்சியல் குட்ஸ் உற்பத்தியாளர்கள் சங்க பொருளாளர் ஹரிஹரன், சிவகாசி லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பரமசிவம், அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க மேலாளர் செல்வகுமார், சிவகாசி வர்த்தக சங்க நிர்வாகி சந்திரசேகர் உடன் இருந்தனர்.

