/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உயர் கோபுர மின் விளக்கு, சிக்னல் இல்லாததால் விபத்துக்கள்
/
உயர் கோபுர மின் விளக்கு, சிக்னல் இல்லாததால் விபத்துக்கள்
உயர் கோபுர மின் விளக்கு, சிக்னல் இல்லாததால் விபத்துக்கள்
உயர் கோபுர மின் விளக்கு, சிக்னல் இல்லாததால் விபத்துக்கள்
ADDED : மே 26, 2024 03:46 AM

காரியாபட்டி: மதுரை தூத்துக்குடி நான்கு வழி சாலையில் செவல்பட்டி, கள்ளிக்குடி பிரிவு ரோட்டில் உயர் கோபுர மின் விளக்கு, சிக்னல் இல்லாது இருளாக இருப்பதால் அடிக்கடி நடக்கும் விபத்து, சேதம் அடைந்துள்ள தொகுப்பு வீடுகளால் குடியிருக்க சிரமம் உட்பட பல்வேறு பிரச்சனைகளால் காரியாபட்டி பேரூராட்சி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
மேலும் விரைந்து முடிக்காத வாறுகால், பஸ் ஸ்டாண்ட் பணிகளால் போக்குவரத்திற்கு பாதிப்பு, பறிமுதல், விபத்து வாகனங்கள் பாழாகி வருவதோடு, போலீஸ் குடியிருப்பில் குப்பைகள் தேங்கி அசுத்தமாக கிடப்பது உள்ளிட்ட பிரச்னைகளால் காரியாபட்டி பேரூராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர்.
காரியாபட்டி பேரூராட்சியில் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணிகள், பிரதான வாறுகால் கட்டும் பணிகள் தாமதமாக நடப்பதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. செவல்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் சேதம் அடைந்து, எப்போது இடிந்து விழுமோ என்கிற நிலை உள்ளது. மதுரை தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் இரவு நேரங்களில் இருளாக இருப்பதால் அடிக்கடி விபத்து நடக்கிறது. ரோட்டை கடக்க படாத பாடு படுகின்றனர். ரோட்டோரங்களில் தள்ளுவண்டி கடைகளை வைத்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.
விபத்தில் சிக்கிய வாகனங்கள், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்த இடம் இல்லாமல், போலீஸ் குடியிருப்பில் நிறுத்தி உள்ளனர். அவைகள் துருப்பிடித்து வாகனங்கள் பாழாகி வருவதோடு, குப்பைகள் நிறைந்து அசுத்தமாக காணப்படுகிறது. விஷ பூச்சிகள் நடமாட்டம் இருப்பதால் அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடிக்கடி நடக்கும் விபத்து
பாஸ்கரன், விவசாயி: மதுரை தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் செவல்பட்டி, கள்ளிக்குடி பிரிவு ரோட்டில் உயர் கோபுரம் மின் விளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. சிக்னல் விளக்குகளும் எரியவில்லை. அதிவேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது. ரோட்டை கடக்கப்படாத பாடு படுகின்றனர். வாகனங்கள் தூரத்தில் வருகிறது என ரோட்டை கடக்க முயலும் போது விபத்தில் சிக்குகின்றனர். அடிக்கடி விபத்து நடப்பதால் உயர் கோபுர மின் விளக்கு, சிக்னல் விளக்குகள் எரியவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொகுப்பு வீடுகளை சீரமைக்க வேண்டும்
ஆறுமுகம், தனியார் ஊழியர்: ெவல்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் படுமோசமாக உள்ளன. எப்போது இடிந்து விழுமோ என்கிற அச்சத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவற்றை மராமத்து பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு வருவதால், பஸ் ஸ்டாண்ட், வாறுகால் கட்டும் பணிகளை விரைவுபடுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏலம் விட வேண்டும்
வெள்ளைச்சாமி, தனியார் ஊழியர்: காரியாபட்டி போலீஸ் குடியிருப்பு பயன்பாடு இன்றி உள்ளது. அங்கு விபத்தில் சிக்கும் வாகனங்கள், பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளன. துருப்பிடித்து முற்றிலும் சேதம் அடைந்து வருகிறது. இவற்றை சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்கவோ, ஏலம் விடவோ நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதியில் குப்பைகள் நிறைந்து அசுத்தமாக கிடப்பதால் விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.