ADDED : செப் 09, 2024 04:52 AM
விருதுநகர் : விதை சான்று உதவி இயக்குனர் கோகிலா கூறியதாவது: நிலக்கடலை விவசாயிகள் விதைப்பதற்கு தேர்வு செய்யும் விதைகள் திரட்சியாக நடுத்தர பருமனுடன் புறத்துாய்மை 96 சதவீதம் இருக்க வேண்டும்.
விதைகள் குறைந்தபட்சம் 70 சதவீதம் முளைப்பு திறனும், அதிகபட்ச ஈரப்பதம் 9 சதவீதமும் இருத்தல் வேண்டும். சான்று பெற்ற தரமான விதைகளை பெற்று விதைக்க வேண்டும்.
விதைப்பதற்கு முன் விதை மூலம் பரவும் பூஞ்சாண் நோயை தடுக்க விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் டிரைக்கோ டெர்மா கொண்டு பூஞ்சாண் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
நிலக்கடலை பயிருக்கு ஏக்கருக்கு 80 கிலோ விதைகள் தேவைப்படும். விதைகளை 30 செ.மீ., இடைவெளியில் விதைத்து ஒரு ச.மீ.,க்கு 33 செடிகள் அளவில் பயிர் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும். இந்த தொழில்நுட்பங்களை பின்பற்றுவதன் மூலம் நிலக்கடலை பயிரில் விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம், என்றார்.