ADDED : ஏப் 28, 2024 06:30 AM

விருதுநகர: விருதுநகர் அருகே அழகாபுரி பகுதியில் உள்ள ஊருணி கோடை வெயிலின் தாக்கத்தால் நீர் வற்றி வறண்டு போனது.
மாவட்டத்தில் டிச. 18, 19 ல் பெய்த கனமழையில் கண்மாய், ஊருணிகள் நிறைந்து காணப்பட்டது. ஆனால் தற்போது அக்னி நட்சத்திரம் துவங்கும் முன்பே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பல கண்மாய், ஊரணிகளில் உள்ள நீர் வேகமாக வற்றி வருகிறது. வைகாசி திருவிழாவிற்காக விவசாய நிலங்களை தயார்படுத்தும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அழகாபுரி பகுதியில் ஊரணி முற்றிலுமாக வறண்டு நீரின்றி உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் மானாவாரி பயிர்கள் பயிரிடுவதில் தாமதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதே நிலை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ஏற்பட்டுள்ளது. கண்மாய்களில் தண்ணீர் இருந்தாலும் கோடை வெப்பத்தால் வேகமாக வற்றி வருகிறது. இதனால் அழகாபுரி பகுதிகளில் கிணறுகள் வைத்துள்ளவர்கள் மட்டுமே வைகாசி திருவிழாவிற்காக நிலத்தை தயார் படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கடந்தாண்டு பெய்த மழையில் அதிக அளவு தண்ணீர் கிடைத்தும் கண்மாய், ஊரணிகளில் முறையான மராமத்து பணிகள் மேற்கொள்ளாததால் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே கோடை காலம் துவங்கி இருப்பதால் வறண்டு போன கண்மாய், ஊரணிகளில் மராமத்து பணிகளை முறையாக மேற்கொண்டு வரக்கூடிய மழைக்காலங்களில் அதிக அளவு நீர் தேக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

