/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆகாயத்தாமரை ஆக்கிரமித்த ஆமத்துார் கண்மாய்
/
ஆகாயத்தாமரை ஆக்கிரமித்த ஆமத்துார் கண்மாய்
ADDED : மே 01, 2024 07:42 AM

விருதுநகர் : விருதுநகர் அருகே ஆமத்துார் கண்மாயில் ஆகாயத்தாமரைகள் நிறைந்து நீரை உறிஞ்சு வருகின்றன. இதனால் விவசாயத்திற்கு தேவையான நீர் தற்போது வற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆமத்துார் கண்மாய் கடந்த ஆண்டு டிச. 18, 19 ஆகிய இரு தினங்கள் பெய்த கனமழையால் நிறைந்து மறுகால் பாய்ந்தது. மேலும் தொடர்ந்து நீர் வந்து கொண்டிருந்ததால் கரைகளை பலப்படுத்துவதற்காக டிராக்டர் மூலம் மண்ணை கொட்டினர்.
கண்மாயில் பல ஆண்டுகளுக்கு பிறகு கோடையில் நீர் நிறைந்து காணப்படுவதால் கரைகளை ஒட்டியப் பகுதிகளில் நிலங்களை வைத்துள்ள விவசாயிகள் தற்போது நெல் நடவு செய்துள்ளனர். இந்த நெற்பயிர்கள் கதிர் வரும் பருவத்தில் உள்ளது. இந்நிலையில் கண்மாய் நீர் வரக்கூடிய நீர் வழிப்பாதைகளில் ஆமத்துார் வீடுகளில் வெளியேற்றும் கழிவு நீர் வாறுகால் மூலம் கண்மாய்க்கு நீர் செல்லும் வாய்க்காலில் கலந்து விடுகிறது.
இதனால் கண்மாய் நீர் மாசடைந்து அதிக அளவில் ஆகாயத்தாமரை வளர்ந்து ஆக்கிரமித்து உள்ளது. மேலும் கோடை வெயிலின் தாக்கத்தால் நீரானது வேகமாக வற்றி வருகிறது. நெல் நடவு செய்த விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
கண்மாயில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ளாததால் போதிய அளவு நீரை தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆமத்துார் கண்மாயில் அதிக அளவில் உள்ள ஆகாயத்தாமரையை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.