/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கீழ உப்பலிக்குண்டுவில் பழமையான சிற்பங்கள்
/
கீழ உப்பலிக்குண்டுவில் பழமையான சிற்பங்கள்
ADDED : பிப் 23, 2025 05:19 AM

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே கீழ உப்பலிக்குண்டு கிராமத்தில் பழமையான சிற்பங்களை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கிராமத்தில் பழமையான சிற்பங்கள் இருப்பதாக வரலாற்றுத் துறை மாணவி மகாலட்சுமி கொடுத்த தகவலின் படி பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் ஸ்ரீதர், பேராசிரியர் தாமரைக்கண்ணன் நேரில் சென்று ஆய்வு செய்த பின் கூறியதாவது: இங்கு முருகன், சண்டிகேஸ்வரர், சூரியன் ஆகிய 3 சிற்பங்கள் காணப்படுகிறது. முருக வழிபாடு என்பது சங்க கால முதல் தொடர்ச்சியாக வரும் வழிபாடு ஆகும். துவக்க காலங்களில் முருக வழிபாட்டிற்கு மிகவும் கவுமாரம் என்று பெயர். பொதுவாக முருகன் சிற்பங்களில் கி.பி., ஆயிரத்திற்கு முன்பாக வேலோ,மயிலோ காணப்படுவது இல்லை.
இந்தச் சிற்பத்தில் வலது கையில் வேலும், காலடியில் மயிலும் உள்ளது. இந்த கோலத்திற்கு சிகிவாகனர் என்று பெயர். சிகிஎன்றால் மயில், மலை மற்றும் நெருப்பை குறிக்கும். மயில் மட்டும் இருப்பதால் சிகி என்ற வார்த்தை மயிலை மட்டும் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம். முருகனின் 4 கரங்களில் வலது கீழ் கரம் வேலை பிடித்துக்கொண்டும், வலது மேல் கரம் வஜ்ராயிதத்தோடும், வலது கீழ் கரம் ஹடி அஸ்தத்திலும் உள்ளது.
ஹடி என்பது இடுப்பை குறிப்பது. சிற்பத்தின் மேல் கரம் சிதைந்து உள்ளது. தலையில் கிரீட பகுதி மட்டும் லேசாக சிதைந்து காணப்படுகிறது. 2 காதுகளிலும் மகர குண்டலங்களும், மார்பில் சன்ன வீரரம் என்ற வீர சங்கிலி உள்ளது. கழுத்தில் அணிகலன்கள் தேய்ந்து காணப்படுகிறது. சிற்பத்தின் உயரம் 3 அடி, அகலம் ஒன்றரை அடியாக உள்ளது.
இங்குள்ள சூரியன் சிற்பம் உயரம் 3 அடி, அகலம் ஒன்றரை அடியாகவும் உள்ளது. சிதைந்த நிலையில் சிற்பம் உள்ளது. சண்டிகேஸ்வரர் சிற்பம் உயரம் 3 அடி, அகலம் 2 ஆக உள்ளது. காலை கீழே தொங்க விட்டு சுகாசன கோலத்தில் காட்சி தருகிறார். 3 சிற்பங்கள் மட்டும் தற்போது இங்கே காணப்படுகிறது. இந்த சிற்பங்கள் 8 ம் நூற்றாண்டை சேர்ந்தது. இந்த பகுதியை நன்கு ஆய்வு செய்தால் மேலும் பல சிற்பங்கள் கிடைக்கும்., என்று கூறினர்.

