/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர், டிரைவருக்கு நீதிமன்ற காவல்
/
தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர், டிரைவருக்கு நீதிமன்ற காவல்
தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர், டிரைவருக்கு நீதிமன்ற காவல்
தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர், டிரைவருக்கு நீதிமன்ற காவல்
ADDED : மே 08, 2024 06:20 AM
ஸ்ரீவில்லிபுத்தூர், ; விருதுநகரில் மருந்து கடை உரிமையாளர் ஆனந்தராஜிடம் ரூ.75 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விருதுநகர் தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் தயாநிதி, அவரது கார் டிரைவர் மணிவண்ணன் ஆகியோரை, மே.21 வரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
விருதுநகர் விக்னேஷ் நகரைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ், 49, மருந்துகடை நடத்தி வருகிறார். இங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு சரிவர சம்பளம் கொடுக்கவில்லை என தொழிலாளர் நலத்துறையின் சார்பில் உதவி ஆய்வாளர் தயாநிதி, நோட்டீஸ் அனுப்பி உள்ளார். பின்னர் புகாரினை தானே சரி செய்து தருவதாகவும், அதற்கு தனக்கு ரூ.75 ஆயிரம் லஞ்சம் தர வேண்டுமென கேட்டுள்ளார்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை ஆனந்தராஜிடம் வழங்கினர். நேற்று முன்தினம் இரவு ஆனந்தராஜிடமிருந்து லஞ்சப் பணத்தை வாங்க உதவி ஆய்வாளர் தயாநிதியும், அவரது கார் டிரைவர் மணிவண்ணனும் மருந்துக்கடைக்கே வந்துள்ளனர்.காரில் அமர்ந்திருந்த தயாநிதி, டிரைவர் மணிவண்ணனை அனுப்பி லஞ்சப் பணம் ரூ.75 ஆயிரத்தை ஆனந்தராஜ் இடமிருந்து பெற்றுள்ளார்.
அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையிலான போலீசார் இருவரையும் கையும், களவுமாக பிடித்தனர்.
நேற்று காலை 11:00 மணிக்கு பிடிபட்ட இருவரையும் ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ஆஜர்படுத்தினர்.
அவர்களை மே 21 வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பிரித்தா உத்தரவிட்டார். இதனையடுத்து இருவரும் விருதுநகர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையில் உதவி ஆய்வாளர் தயாநிதியின் திருமங்கலத்தில் உள்ள அவரது வீட்டில், நேற்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்து சொத்து ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக லஞ்ச ஒழித்துறை போலீசார் தெரிவித்தனர்.

