ADDED : ஆக 20, 2024 06:51 AM

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட கோயில்களில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணுால் அணியும் வைபவம் கடைபிடிக்கப்பட்டது. இதில் புரோகிதர்கள், பிராமணர்கள் தங்கள் பூணுாலை புதுப்பித்து அணிந்தனர்.
ஆவணி மாத பவுர்ணமி திதியும், அவிட்ட நட்சத்திரமும் இணைந்து வரும் நாள் ஆவணி அவிட்டமாக கொண்டாடப்படுகிறது. இந்நாள் வேதங்கள் அவதரித்த நாளாகவும், மஹாவிஷ்ணு ஹயக்கிரீவராக அவதரித்த நாளாகவும், வேதங்களை அசுரர்களிடமிருந்து தேவர்கள் மீட்டதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது. ஆவணி அவிட்டத்தில் நீர்நிலைகள், கோவில்கள், திருமண மண்டபங்களில் புரோகிதர்கள் குழுக்களாக அமர்ந்து மந்திரங்களை பாராயணம் செய்து பூணுாலை மாற்றிக்கொள்வர்.
விருதுநகர் அக்ரஹாரத்தெருவில் புரோகிதர் சங்கர் கணேஷ் தலைமையில் நடந்த ஆவணி அவிட்டம் பூணுால் புதுப்பிக்கும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் விருதுநகர் பிராமண ஸமாஜம் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில், ராஜபாளையத்தில் வடக்கு அக்ரஹாரம், தெற்கு, சர்வ சமுத்திர அக்ரஹாரம், கோதண்ட ராமசாமி கோயில், தெற்கு சம்மந்தபுரம் அக்ரஹாரம், அருப்புக்கோட்டை, சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கணபதி பூஜையுடன் துவங்கி காயத்ரி மந்திரத்தை உச்சரித்து தங்கள் பூணுாலை புதுப்பித்து அணிந்தனர்.

