அருப்புக்கோட்டை வழியாக தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுமா? வெளியூர் செல்ல முடியாமல் பரிதவிக்கும் பயணிகள்
அருப்புக்கோட்டை வழியாக தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுமா? வெளியூர் செல்ல முடியாமல் பரிதவிக்கும் பயணிகள்
UPDATED : ஜூலை 21, 2026 05:01 PM
ADDED : ஜூலை 21, 2026 04:30 PM
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை, திருச்சுழி பகுதிகளில் நவீன வசதிகளுடன் கூடிய ரயில்வே ஸ்டேஷன்கள் இருந்தும் சென்னைக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்காததால் வெளியூர் செல்வதற்கு பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
அருப்புக்கோட்டையில் ரயில்வே ஸ்டேஷன் 1963 ம், ஆண்டு அப்போதைய முதல்வர் காமராஜரால் திறக்கப்பட்டது. மானாமதுரை சந்திப்பில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக விருதுநகர் சந்திப்பு செல்ல புதிய வழித்தடம் அமைக்கப்பட்டது. பின்னர் 2008 ல், மீட்டர் கேஜில் இருந்து அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. பணிகள் முடிந்து நவீன வசதிகளுடன் 2012 ல், மீண்டும் திறக்கப்பட்டது. அதன்பின், 2022 ல், விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மானாமதுரை வரை, 67 கி.மீ., மின்சார பாதை அமைக்கப்பட்டது.
இத்தனை வசதிகள் இருந்தும் ஒரே ஒரு பயணிகள் ரயில் விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, திருச்சி இடையே இயக்கப்படுகிறது. இதை தவிர்த்து தினசரி ரயில் எதுவும் அருப்புக்கோட்டை வழியாக இயக்கப்படவில்லை. 2013 -- 14 ம், ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் சென்னை எழும்பூரில் இருந்து காரைக்குடி வரை வாரம் 2 முறை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க அறிவிப்பு வெளியானது. பின்னர், மக்களின் கோரிக்கையை ஏற்று மானாமதுரை வர இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டது. அருப்புக்கோட்டையில் இருந்து சென்னை செல்ல ரயில்கள் இல்லை. அருப்புக்கோட்டை வழியே சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்க அருப்புக்கோட்டை ரயில் பயணிப்போர் நல சங்கத்தின் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் பயனாக வாரம் 2 முறை இயக்கப்பட்டு வந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் வாரம் 3 முறையாக மாற்றப்பட்டது.
மற்ற ஊர்களில் ரயில்வே ஸ்டேஷனுக்கு இருப்பு பாதை மற்றும் பராமரிப்பு பணிகள் நடக்கும் போது மட்டும் பல ரயில்கள் அருப்புக்கோட்டை வழியாக வந்து செல்லும். பணிகள் முடிந்த பின் நிறுத்தப்படும்.
தற்போது சிலம்பு அதிவிரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும் என்பதே அருப்புக்கோட்டை மக்களின் நீண்ட கால கோரிக்கை. முதியோர்கள், மாணவர்கள், அரசு அலுவலர்கள், வர்த்தகர்கள் என பல்வேறு தரப்பினர்க்கும் பயனுள்ள வகையில் இருப்பதால் இதை தினசரி ரயிலாக இயக்க வேண்டும். அதிக வருமானம் வரும் ரயிலாக உள்ளது.
அருப்புக்கோட்டை ஸ்டேஷன் புனரமைப்பு செய்யப்பட்டு 13 ஆண்டுகள் ஆகியும் சென்னைக்கு தினசரி ரயில் இல்லை என்பது பொதுமக்களின் நீண்ட கால ஆதங்கம்.
இதேபோன்று திருச்சுழி ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் கொரோனா தாக்கத்திற்கு பின் நிறுத்தப்பட்டது. அதன் பின் எந்த ஒரு ரயிலும் திருச்சுழி ஸ்டேஷனில் நிற்பதே இல்லை. சிலம்பு எக்ஸ்பிரஸ் திருச்சுழி ஸ்டேஷனில் நின்று செல்ல வேண்டும் என்பது அப்பகுதி கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ரயில்வே நிர்வாகம் அருப்புக்கோட்டை திருச்சுழி வழியாக செல்லகூடுதல்கள் ரயில்களை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக மாற்றுவதற்குரிய நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.
___
____
