ADDED : செப் 18, 2024 04:07 AM
விருதுநகர், : விருதுநகர் வெம்பக்கோட்டை தாயில்பட்டியில் தேசிய தேனீ, தேன் இயக்கத்தின் கீழ் தோட்டக்கலைத்துறை மூலம் தேனீ வளர்ப்பு, அதன் பயன்கள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
எம்.எல்.ஏ., ரகுராமன் முன்னிலை வகித்தார். கலெக்டர் ஜெயசீலன் துவக்கி வைத்து 4 பேருக்கு சிப்பம் கட்டும் அறை அமைப்பதற்கான பணி ஆணைகள், ஒருவருக்கு நடமாடும் காய்கனி விற்பனை வண்டி, இருவருக்கு பனை பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைப்பதற்கான பணி ஆணைகளை வழங்கினார். கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலை துறையினரின் தேனீ மகத்துவ மையம், மதுரை மாவட்ட தேனீ வளர்ப்பின் முன்னோடி விவசாயி ஜோஸ்பின் தேன் சம்பந்தப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டது.
இக்கருத்தரங்கின் முதல் நாளில் தேனீக்களின் உயிரியியல், குணாதிசயங்களை பற்றி பூச்சியியல் துறை சுரேஷ், தோட்டக்கலைத்துறை பாலசுப்பிரமணியன், கலசலிங்கம் தோட்டக்கலை கல்லுாரி உதவி பேராசிரியர் பாண்டியராஜ் பேசினர். வேளாண் அறிவியல் நிலையம் ஜடா கவிதா தேன் சம்பந்தப்பட்ட விலை உயர்ந்த பொருட்கள் தயாரிப்பை பற்றி விளக்கமளித்தார்.

