/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கட்டளைப்பட்டி ரோடு சீரமைக்க பூமி பூஜை
/
கட்டளைப்பட்டி ரோடு சீரமைக்க பூமி பூஜை
ADDED : ஜூன் 21, 2024 03:40 AM

சிவகாசி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சிவகாசி இரட்டை பாலத்தில் இருந்து கட்டளைப் பட்டி செல்லும் ரோட்டை சீரமைக்க பூமி பூஜை போடப்பட்டது.
சிவகாசி இரட்டை பாலம் விலக்கிலிருந்து கட்டளைப் பட்டி செல்லும் ரோடு அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ரோடு போட்ட சில ஆண்டுகளிலேயே பல இடங்களில் சேதம் அடைந்து விட்டது.
இதில் அவ்வப்போது கிராவல் மண் அடித்தும், ஒட்டு போடும் பணியும் நடந்தது. பெரியகுளம் கண்மாய் கரையை ஒட்டி ரோடு அமைந்துள்ளதால் எப்போதும் தண்ணீர் ஓட்டத்தினால் எத்தனை முறை சீரமைத்தாலும் ரோடு தாங்காமல் அடிக்கடி சேதம் அடைந்து விடுகின்றது.
சில மாதங்களுக்கு முன்பு வழக்கம்போல ரோட்டில் சீரமைக்கும் பணி நடந்தது. ஆனாலும் சிறிய மழைக்கே தாங்காமல் ரோடு மீண்டும் சிதைந்து விட்டது. இந்த ரோட்டில் அதிகமாக பள்ளி, கல்லுாரி மாணவர்கள் செல்கின்றனர்.
நகருக்குள் போக்குவரத்து இடையூறு என்பதால் கனரக வாகனங்கள், ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் செல்லும் பஸ்கள் இந்த ரோட்டினைத் தான் பயன்படுத்துகின்றன. ஆனால் இதில் வருகின்ற அனைத்து வாகனங்களும் தட்டுத் தடுமாறியே வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. டூவீலரில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே சேதமடைந்த ரோட்டினை சீரமைக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ரோட்டினை சீரமைக்க அசோகன் எம்.எல்.ஏ., தலைமையில் பூமி பூஜை போடப்பட்டது.
இது குறித்து எம்.எல்.ஏ., கூறுகையில், பெரியகுளம் கண்மாய் ரோட்டினை சீரமைப்பதற்காக சி.எஸ்.ஆர்., பங்களிப்பு நிதி, தன்னார்வலர்கள் பங்களிப்பு நிதி மற்றும் எனது சொந்த நிதியில் உடனடியாக பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது., என்றார்.