/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வசதி இன்றி இருக்கும் பஸ் ஸ்டாண்ட், துார்வாராத கண்மாய்
/
வசதி இன்றி இருக்கும் பஸ் ஸ்டாண்ட், துார்வாராத கண்மாய்
வசதி இன்றி இருக்கும் பஸ் ஸ்டாண்ட், துார்வாராத கண்மாய்
வசதி இன்றி இருக்கும் பஸ் ஸ்டாண்ட், துார்வாராத கண்மாய்
ADDED : ஜூன் 30, 2024 06:07 AM

நரிக்குடி: சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து படுமோசமாக இருக்கும் கண்மாய் தூர்வாராதது, அடிப்படை வசதிகள் இன்றி செயல்படும் பஸ் ஸ்டாண்ட், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட மின் கட்டண வசூல் மையம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் நரிக்குடி ஊராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர்.
நரிக்குடியை சுற்றி 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. வருவாய் சம்பந்தப்பட்ட ஆவணங்களை பெற பல கி.மீ., பயணித்து திருச்சுழி செல்ல வேண்டும் என்பதால் சிரமப்படுகின்றனர்.
நரிக்குடியில் செயல்பட்ட மின் கட்டண வசூல் மையம் பல ஆண்டுகளாக செயல்படாமல் கிடப்பில் உள்ளது. மின் கட்டணம் செலுத்த வீரசோழனுக்கு சென்று வர வேண்டும் என்பதால் சிரமப்படுகின்றனர். வாரச்சந்தை ரோட்டோரத்தில் நடைபெறுவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.
பஸ் ஸ்டாண்டில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
கூட்டுறவு அலுவலகம் வாடகை கட்டடத்தில் இயங்கி வருவதால் பாதுகாப்பு குறைபாடு உள்ளது. முக்குளம் கண்மாய் தூர் வாராமல் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதோடு, கழிவு நீர் கலந்து அசுத்தமாக, துர்நாற்றம் வீசுகிறது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் 2 வருடங்களாக உயர் கோபுர மின் விளக்கு எரியாமல் உள்ளது.
புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கியும் துவக்கப்படாமல் உள்ளது. முக்கு ரோட்டில் ரவுண்டானா, சிக்னல் விளக்கு இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
ரயில்வே பாலம் வேண்டும்
கனி, தனியார் ஊழியர். மானாமதுரை, நரிக்குடி, அருப்புக்கோட்டை வழித்தடத்தில் பயணிகள் ரயில், சரக்கு ரயில் வந்து செல்வதால் அடிக்கடி கேட் மூடப்படுகிறது. நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆத்திர அவசரத்திற்கு வாகனங்கள் சென்றுவர முடியவில்லை. ரயில் பாலம் அமைக்க வேண்டும்.
மூன்று ரோடு சந்திக்கும் இடத்தில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதால் சிக்னல், ரவுண்டானா ஏற்படுத்த வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையம் முன் அமைக்கப்பட்ட உயர் கோபுரம் மின் விளக்கு நீண்ட நாட்களாக எரியாமல் உள்ளது. சீரமைக்க வேண்டும்.
புதிய பஸ் ஸ்டாண்ட் வேண்டும்
சந்துரு, தனியார் ஊழியர்: சுற்றியுள்ள கிராமங்களுக்கு நரிக்குடி வந்து தான் மற்ற ஊர்களுக்கு பஸ் ஏற வேண்டும் இங்குள்ள பஸ் ஸ்டாண்டில் போதிய அடிப்படை வசதி கிடையாது. போதிய அளவு இட வசதியும் கிடையாது.
அடிப்படை வசதிகளுடன் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வரத்து ஓடையில் கழிவு நீர் சென்று, கண்மாயில் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. அடர்ந்து வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களால் தண்ணீர் தேக்க முடியவில்லை. தூர்வாரி, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாலுகா ஏற்படுத்த வேண்டும்
மாரீஸ் கண்ணன், தனியார் ஊழியர்: வருவாய் சம்பந்தப்பட்ட அனைத்து தேவைகளுக்கும் பல கி.மீ., தூரம் பயணித்து திருச்சுழி தாலுகா அலுவலகத்திற்கு செல்ல வேண்டி இருக்கிறது.
இப்பகுதி கிராமங்களுக்கு மையத்தில் உள்ள நரிக்குடியை தாலுகாவாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட மின் கட்டண வசூல் மையத்தை செயல்படுத்த வேண்டும்.
வாரச்சந்தைக்கு புதிய கடைகள் கட்ட வேண்டும். வாடகை கட்டடத்தில் இயங்கும் கூட்டுறவு அலுவலகம், அங்கன்வாடி மைய கட்டடத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும்.