/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அடுத்த ஆண்டிற்கான காலண்டர் ஆல்பம் வெளியீடு
/
அடுத்த ஆண்டிற்கான காலண்டர் ஆல்பம் வெளியீடு
ADDED : ஆக 04, 2024 02:42 AM

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 2025 ம் ஆண்டிற்கான புதிய காலண்டரில் பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டு ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது. மின் கட்டணம் உயர்வு உள்ளிட்ட காரணங்களால் 10 சதவீதம் வரை காலண்டர் விலை உயர்ந்துள்ளது.
குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசி பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழிலுக்கு மட்டுமல்லாமல் காலண்டருக்கும் பிரசித்தி பெற்றது. சிறிதும் பெரிதாக 300க்கும் மேற்பட்ட காலண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18 ம் பெருக்கை முன்னிட்டு இங்குள்ள காலண்டர் உற்பத்தியாளர்கள் புதிய ஆண்டிற்கான ஆல்பத்தை வெளியிடுவர். தொடர்ந்து காலண்டர் தயாரிக்கும் பணிகள் தொடங்கும்.
நவம்பர் வரை ஆர்டர் பெற்று டிசம்பரில் காலண்டர் தயாரிப்பு பணிகள் வேகமெடுக்கும். ரூ. 15 முதல் ரூ. 2500 வரை காலண்டர் பல்வேறு விதங்களில் தயாராகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் காலண்டர் தயாரிப்பில் பல்வேறு புதுமைகளை உற்பத்தியாளர்கள் புகுத்துவர். இந்த ஆண்டு, மரகத காலம் என்ற காலண்டரில் கடிகாரம், நாட்காட்டி என புதுமைகள் புகுத்தப்பட்டுள்ளன. பவளக்கல் காலண்டரில் ஒளிரும் கற்கள் பதிக்கப்பட்டு, சுவாமி தத்ரூபமாக காண்பிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஒவ்வொரு நாளிலும் 234 சட்ட சபை தொகுதியை தலைப்பாக கொண்டு கியூஆர் கோடு அச்சிட்டுள்ளனர். அதை ஸ்கேன் செய்தால் அந்த சட்டசபை தொகுதியின் மாவட்டம், சிறப்புகள், ஆன்மிகத் தலங்கள், என்ன பல்வேறு தகவல்கள் கிடைக்கும். டேபிள் காலண்டர், மாதாந்திர காலண்டர் என அனைத்திலும் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது.
ஜெய்சங்கர், தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர் சங்க செயலாளர், சிவகாசி:
ஒவ்வொரு ஆண்டும் காலண்டரில் புதுமைகளை புகுத்துவது வழக்கம். 2025 ஆம் ஆண்டிற்கான காலண்டரிலும் பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டுள்ளன.
மின் கட்டணம் உயர்வு, வேலையாட்கள் கூலி உயர்வு, ஆர்ட் பேப்பர் விலை உயர்வால் காலண்டர் விலை 10 சதவீதம் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.