/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி.,யில் அதிகரிக்கும் கஞ்சா விற்பனை
/
ஸ்ரீவி.,யில் அதிகரிக்கும் கஞ்சா விற்பனை
ADDED : மே 06, 2024 12:11 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் அதிகரிக்கும் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி பலரை கைது செய்து வரும் நிலையில் இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்துார் உள்ள அனைத்து ஸ்டேஷன்களிலும் போலீசார், அடிக்கடி சோதனை நடத்தி கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர். அவர்கள் பயன்படுத்திய வாகனங்களையும், வைத்திருக்கும் ரொக்க பணத்தையும் கைப்பற்றுகின்றனர். விற்பனையில் ஈடுபடுபவர்களின் சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை செய்து வருகின்றனர்.
இருந்த போதிலும் நகரில் பல்வேறு இடங்களில் மட்டுமின்றி வன்னியம்பட்டி, கிருஷ்ணன்கோவில் போன்ற பகுதிகளிலும் கஞ்சா விற்பனையாளர்கள் அடிக்கடி பிடிபட்டு வருகின்றனர். இதில் கிருஷ்ணன்கோவிலில் கஞ்சா விற்பனை ஈடுபட்ட வெளி மாநில கல்லுாரி மாணவர்களும் பிடிபட்டுள்ளனர்.
இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. முகேஷ் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் போலீசார் கஞ்சா விற்பனை தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து, அவர்களை சிறையில் அடைத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் பகுதியில் பள்ளி அருகே விற்பனை செய்ய கஞ்சா வைத்திருந்த லட்சுமி 48, அழகு சுந்தரி 38, ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த 60 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதே போல் வலையப்பட்டி விலக்கு அருகே மாணவர்களுக்கு விற்பனை செய்ய கஞ்சா வைத்திருந்த பிரகாஷ் 27, என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 950 கிராம் கஞ்சா, டூவீலரை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக இருக்கும் கிருஷ்ணன் கோயில் ரூபன் என்பவரை தேடி வருகின்றனர்.
நகரில் கஞ்சா விற்பனையை முழு அளவில் தடுக்க கஞ்சா விற்பனையில் ஈடுபடும் இளைஞர்கள், முதியவர்கள், பெண்களை தனிப்படை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.