/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மழையின்றி தீவன பற்றாக்குறையில் கிடை மாடுகள்
/
மழையின்றி தீவன பற்றாக்குறையில் கிடை மாடுகள்
ADDED : ஏப் 28, 2024 06:15 AM

ராஜபாளையம் ; கோடை மழை பொய்த்துள்ள நிலையில் 'கிடை'க்காக வளர்க்கப்படும் மாடுகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி ஒட்டிய ராஜபாளையம், சேத்துார், வத்திராயிருப்பு, கூமாப்பட்டி, தளவாய்புரம் பகுதிகளில் கிடை மாடுகள் எனப்படும் மேய்ச்சல் மாடுகள் கூட்டமாக வளர்ப்போர் அதிகம்.
ஒவ்வொரு பகுதியிலும் குழுவாக குறைந்தது 150 முதல் 600 வரை நாட்டின மாடுகளை குழுவாக வளர்த்து பராமரிப்பர். விவசாய சாகுபடிக்கு பின் அடுத்த பயிரிடலுக்கு தயார் செய்வதற்காக ரசாயன உரங்களுக்காக மாற்றாக மாடுகளில் இருந்து கிடைக்கும் சாணம், சிறுநீர் பாரம்பரிய இயற்கை உரமாக இருந்து வருகிறது.
ஆண்டில் ஆறு மாதம் கிடை போடுவர். மீதி காலங்களில் மலையை ஒட்டிய வன பகுதிகளில் மாடுகளை மேய்த்து தீவனத்திற்கான தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர். இந்நிலையில் வனப்பகுதி ஒட்டிய மலைப்பகுதியில் மேய்ச்சலுக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து பட்டா தரிசு நிலங்களில் மேய்த்து வந்தனர்.
தற்போது கோடை மழை பொய்த்து உள்ள நிலையில் மேய்ச்சல் நிலங்கள் காய்ந்துள்ளன. இதனால் தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சந்தையில் தீவனமும் மூடைக்கு 50 ரூபாய் விலை ஏற்றம் கண்டுள்ளது. இதனால் குழுவாக மாடு வளர்ப்போர்க்கு தீவனப் பிரச்சினையால் இத்தொழிலை விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே கால்நடைகளை தொழிலாக வளர்த்து வருவோருக்கு மானிய விலையில் தீவனம் வழங்கி காக்க வேண்டும் என பாரம்பரிய மலை மாடுகள் வளர்ப்பு சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

