/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பை விரைந்து செயல்படுத்த சதுரகிரி பக்தர்கள் விருப்பம்
/
மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பை விரைந்து செயல்படுத்த சதுரகிரி பக்தர்கள் விருப்பம்
மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பை விரைந்து செயல்படுத்த சதுரகிரி பக்தர்கள் விருப்பம்
மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பை விரைந்து செயல்படுத்த சதுரகிரி பக்தர்கள் விருப்பம்
ADDED : மார் 10, 2025 04:26 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:,சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு தினமும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்ற மதுரை உயர்நீதிமன்ற உத்தரவை அரசு விரைவில் செயல்படுத்த வேண்டும். கேரளாவில் சபரிமலையில் உள்ளதுபோல் சதுரகிரியிலும் பாதுகாப்பு உட்பட அனைத்து வசதிகளும் செய்து தர வேண்டுமென சதுரகிரி பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் 2015க்கு முன்பு வரை தினசரி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வந்தனர். 2015ல் மலையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி வழிபாட்டை முன்னிட்டு 4 நாட்கள் மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் நிலை கடந்த 10 ஆண்டுகளாக நீடிக்கிறது. மலைக்கு செல்லும் வழியில் பாலங்கள் அமைத்தல் உட்பட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு நிர்வாகம் செயல்படுத்தாமல் தற்போது வரை அலட்சிய போக்குடன் இருந்து வருகிறது. இது சதுரகிரி பக்தர்களுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பிறகு சுவாமி தரிசனம் செய்வதில் மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். 10 நாட்கள் நடக்கும் நவராத்திரி திருவிழாவிற்கு கூட பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இவ்வாறு சாதாரண பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்த நிலையில், அனுமதி இல்லாத நாட்களில் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், செல்வாக்கு மிக்கவர்கள் சுவாமி தரிசனம் செய்து வருவதாக புகார் எழுந்தது. இதனால் சதுரகிரி பக்தர்கள் மேலும் மன வேதனை அடைந்தனர்.
இந்நிலையில் சுந்தரபாண்டியத்தைச் சேர்ந்த சடையாண்டி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடர்ந்த வழக்கில், அனைத்து நாட்களும் காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை பக்தர்களை சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பு சதுரகிரி பக்தர்களிடம் மிகுந்த மன மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யாமல், கேரளாவில் சபரிமலையில் எப்படி பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்களோ, அங்கு என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளதோ அதுபோல் சதுரகிரியிலும் செய்து தந்து அனைத்து நாட்களும் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிப்பதற்கு, நீதிமன்ற உத்தரவை விரைவில் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சதுரகிரி பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.