/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குழந்தை தொழிலாளர்கள் மாயமாவது அதிகரிப்பு
/
குழந்தை தொழிலாளர்கள் மாயமாவது அதிகரிப்பு
ADDED : மார் 29, 2024 05:49 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு குழந்தை தொழிலாளர்களாக பணியாற்றுபவர்கள் வீட்டில் இருந்து வெளியேறி காணாமல் போவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி. இவர் 10ம் வகுப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு விருதுநகர் தெப்பம் அருகே ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் மார்ச் 24 மாலை 6:00 மணிக்கு வெளியே சென்றவர் எங்கு சென்றார் என தெரியவில்லை.
அதே போல அல்லம்பட்டி ராமன் தெருவைச் சேர்ந்தவர் 17 வயதுடைய சிறுமி. இவர் பதினொன்றாம் வகுப்பு முடித்து விட்டு ஐஸ்கிரிம் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
மார்ச் 20 காலை 9:30 மணிக்கு பணிக்கு சென்றவர் திரும்ப வீட்டிற்கு வரவில்லை.
இது போன்று பள்ளி படிப்பை பயிலும் மாணவர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வேலைக்கு செல்கின்றனர்.
குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தக்கூடாது என அரசு பல விழிப்புணர்வுகளை வழங்கி வருகிறது.
ஆனால் சில நிறுவனங்கள், கடைகளின் உரிமையாளர்கள் சம்பளம் குறைவாக கொடுத்தால் போதும் என்ற லாப நோக்கத்தில் குழந்தை தொழிலாளர்களை பணிக்கு ஈடுபடுத்துகின்றனர்.
மேலும் மாவட்டத்தில் உணவகங்கள், போர்வெல் உள்ளிட்ட தொழில்களில் வட மாநில குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிவது அதிகரித்துள்ளது.
இது போன்ற குழந்தை திருமண சம்பவங்களும் அதிகரித்துள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தும் நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

