குடிப்பதற்கும் சமைப்பதற்கும் மற்ற புழக்கங்களுக்கும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அந்தந்த பகுதிகளில் மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்பட்டு குடிநீர் விநியோகம் நடக்கிறது. ஒவ்வொரு கிராமங்களிலும் 2 மேல்நிலைத் தொட்டிகளாவது இருக்கும். போர்வெல் அமைத்து மேல்நிலைத் தொட்டிகளில் தண்ணீரை தேக்கி விநியோகம் நடக்கும். பெரும்பாலான கிராமங்களில் கட்டப்பட்ட மேல்நிலைத் தொட்டிகள் ஆண்டுகள் பல ஆகிவிட்டதால் சேதம் அடைந்துள்ளது. இருப்பினும் இதுபோன்ற தொட்டிகளில் தண்ணீரை தேக்கி மக்களுக்கு வழங்கப்படுகிறது.
காலப்போக்கில் தண்ணீர் தொட்டிகளில் பாசிகள் மற்றும் பிற மாசுபாடுகளால் தொட்டி மாசுபடும். மேல்நிலை தொட்டிகளை அடிக்கடி சுத்தம் செய்தல் அவசியம். இல்லை எனில் தண்ணீர் மாசுபட்டு அதன் சுவை பாதிக்கப்படும். பொதுவாக மேல்நிலைத் தொட்டிகளை மாதத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்வது அவசியம். சூழ்நிலை காரணமாக அடிக்கடி சுத்தம் செய்வது நல்லது.
பெரும்பான்மையான கிராம பகுதிகளில் உள்ள மேல்நிலைத் தொட்டிகளை பராமரிப்பு செய்வது இல்லை. தொட்டிகள் பல சேதம் அடைந்த நிலையில் இருப்பதால் அவற்றில் ஏறி சுத்தம் செய்வதற்கு ஏற்ற பாதுகாப்பு இல்லை. பல தொட்டிகளில் மேல் மூடிகளும் இல்லை. இவற்றின் உள்ளே செடிகள் வளர்ந்தும், மண் தேங்கியும், பாசம் பிடித்தும் உள்ளன.
மேல்நிலைத் தொட்டிகளை பராமரிப்பு என்ற பெயரில் கடமைக்கு ப்ளீச்சிங் பவுடர் மட்டும் தெளிக்கின்றனர். தொட்டியில் உள்ள தண்ணீரை முழுவதும் வெளியேற்றி, அவற்றில் உள்ள மண், பாசத்தை முற்றிலும் அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. காலப்போக்கில் குடிநீர் மாசுபட்டு மக்களுக்கு நோய் ஏற்படுகிறது. கிராமப்புறங்களில் நோய்கள் பெரும்பாலும் சுகாதாரமற்ற குடிநீரை பருகுவதால் ஏற்படுகிறது.
திருச்சுழி அருகே குச்சம்பட்டி புதூரில் தண்ணீர் பாதிப்பினால், 20 க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டது. பின்னர், மாவட்ட நிர்வாகம் கிராமத்தில் அவசரம் அவசரமாக குடிநீர் பகிர்மான குழாய்களை சரி செய்தும், மேல்நிலை தொட்டிகளை சரி செய்து ப்ளீச்சிங் பவுடர் தெளித்தும், மருத்துவம் குழுவினர் அங்கு முகாமிட்டு, மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மேல்நிலைத் தொட்டிகளை கண்டிப்பாக மாதத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்து கிருமி நாசினிகளை தெளித்து, சுத்தம் செய்து பின்னர் பாதுகாப்பான குடிநீரை மக்களுக்கு வழங்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகம் சேதமடைந்த தொட்டிகளை இடித்துவிட்டு புதிய தொட்டிகள் கட்டி, அதன் மூலம் பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

