மாவட்டத்தின் உள்ள விவசாய கூலித் தொழிலாளர்கள், பட்டாசு ஆலை, பஞ்சாலை தொழிலாளர்கள் , குறைந்த சம்பளத்தில் ஓட்டல்கள், டீக்கடைகள், பல சரக்கு கடைகளில் வேலை பார்க்கும் பல ஆயிரம் ஏழைகள் வாழ்வாதாரத்திற்கும், பொருளாதார உயர்வுக்கும் உதவும் வகையில் அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள், கடனுதவிகள் மானியத்துடன் வழங்கப்படுகிறது. மேலும் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் ஆண்டுதோறும் பல லட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்கப்படுகிறது.
ஆனால் போதிய கல்வி அறிவு , விழிப்புணர்வு இல்லாத கூலி தொழிலாளர்கள் ஏராளமானோர் இது பற்றிய முழு அளவிலான புரிதல் இல்லாமல் அதிக வட்டிக்கு உடனடியாக கடன் தரும் கந்துவட்டி கும்பல்களிடம் கடன் வாங்கி அசல் தொகையை விட இரு மடங்கு வட்டி செலுத்தியும் கடனை அடைக்க முடியாமல் தவிக்கும் நிலை காணப்படுகிறது.
பல மகளிர் சுய உதவி குழுக்கள் சிறப்பாக செயல்பட்டாலும் தங்கள் உறவினர்களை சேர்த்து குழுக்களை உருவாக்கி மானியத்துடன் கடனுதவி வாங்கும் சில தனி நபர்கள் அதனை பல மடங்கு வட்டிக்கு கூலி தொழிலாளர்களுக்கு கொடுத்து வசூலித்து வருகின்றனர்.
ஒவ்வொரு நகரிலும் உள்ள தேசிய வங்கிகள் குறைந்த வட்டியில் பல லட்சம் ரூபாய் தனி நபர் நகை கடன் வழங்கி வரும் நிலையில் அது பற்றி அறியாத ஏராளமான கிராமப்புற மக்கள், தங்கள் வீடு தேடி வந்து கடன் உதவி தரும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடம் கடன் வாங்கி அசல் தொகையுடன் 2 மடங்கிற்குமேல் கடன் தொகையை செலுத்துகின்றனர்.
பல்வேறு தனியார் நகை கடன் வழங்கும் பைனான்ஸ் நிறுவனங்கள் நான்கு முதல் ஆறு மாதத்திற்குள் நகைகளை திருப்பி விட வேண்டும் என்ற நிபந்தனையை மக்களிடம் தெளிவாக எடுத்துச் சொல்லாமல், பல மாதங்கள் கழித்து நகையை திருப்ப வரும்போது, கடன் தொகை அதிகரித்து நகை ஏலம் விடப்பட்டதாக கூறுகின்றனர். இவ்வாறு மக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாமல் தங்கள் நகைகளை, பணங்களை இழந்து வருகின்றனர்.
எனவே, மாவட்டத்தில் கிராமங்கள் மற்றும் நகர்கள் தோறும் தேசிய வங்கிகள் தாங்கள் வழங்கும் கடனுதவி, வட்டி விகிதங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்கள் கேட்கும் கடனுதவிகளை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.