/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தீபாவளி, ஓணம் பண்டிகைகளுக்கு சுற்றுச்சூழல் விலக்களிக்க பரிசீலனை
/
தீபாவளி, ஓணம் பண்டிகைகளுக்கு சுற்றுச்சூழல் விலக்களிக்க பரிசீலனை
தீபாவளி, ஓணம் பண்டிகைகளுக்கு சுற்றுச்சூழல் விலக்களிக்க பரிசீலனை
தீபாவளி, ஓணம் பண்டிகைகளுக்கு சுற்றுச்சூழல் விலக்களிக்க பரிசீலனை
ADDED : ஆக 14, 2024 01:16 AM

சிவகாசி:''தீபாவளி, ஓணம் போன்ற பண்டிகைகள் சிறப்பு நிகழ்ச்சியாக அறிவிக்கப்பட்டு அதில் சுற்றுச்சூழல் விலக்களிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்,'' என, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்தார்.
சிவகாசியில் பட்டாசு ஆலை சங்கத்தினர், விற்பனையாளர் சங்கத்தினருடன் பாதுகாப்பான பட்டாசு குறித்து கலந்துரையாடல், ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபியுடன் பட்டாசு ஆலை உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் சங்கத்தினர் கலந்துரையாடினர்.
தண்டனைகளை குறைக்க வேண்டும்
சங்கத்தினர் கூறியதாவது: பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தவும், சரவெடி தயாரிக்கவும் அனுமதிக்க வேண்டும். மழைக்காலங்களில் இடி தாக்கி பட்டாசு ஆலையில் விபத்து ஏற்படும் போது அதன் தற்காலிக உரிமம் ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் உரிமம் புதுப்பிக்க நீண்ட காலம் ஆவதால் உற்பத்தி மேற்கொள்ள முடியவில்லை. எனவே உடனடியாக உரிமம் வழங்கவும், விபத்து நேரிடும் போது ஆலை உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் தண்டனையை குறைக்கவும் வேண்டும்.
தீபாவளி பண்டிகைக்கு சுற்றுச்சூழலில் சிறப்பு விலக்கு அளிக்கவும், இந்திய அளவில் பட்டாசு கடைகளுக்கு வழங்கப்படும் உரிமத்தை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வழங்கவும் வேண்டும். மேலும் பட்டாசு கடை 9 மீட்டர் குறைவாகவும் இருக்கக் கூடாது, 25 மீட்டர் நீளத்திற்கு அதிகமாகவும் இருக்கக்கூடாது என விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றனர்.
சுற்றுச்சூழல் விலக்கு
இதற்கு பதில் அளித்து மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி பேசியதாவது: பட்டாசு உற்பத்தியில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்துவது, சரவெடி தயாரிப்பது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. நீதிமன்ற உத்தரவின்படியே பட்டாசுகள் தயாரிக்க வேண்டும். தற்காலிக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளுக்கு உடனடியாக ஆய்வு செய்து மீண்டும் உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்படும்.
இடி தாக்காமல் இருப்பதற்கு பட்டாசு ஆலைகளில் மகிழம்பூ மரங்களை வளர்க்கலாம். தீபாவளி, ஓணம் போன்ற பண்டிகைகள் சிறப்பு நிகழ்ச்சியாக அறிவிக்கப்பட்டு அதில் சுற்றுச்சூழல் விலக்கு ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்படும். பட்டாசு கடைகளுக்கு உரிமம் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தமிழ்நாடு பட்டாசு கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டான்பாமா), தி இந்தியன் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் (டிப்மா), சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் (சிப்மா) உட்பட பல்வேறு சங்க நிர்வாகிகள், பெசோ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொழிலாளர்களிடம் குறைகேட்பு
தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஆய்வு செய்தார். அனைத்து பட்டாசு உற்பத்தி அறைகளில் கான்கிரீட் அமைக்க வேண்டும். பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும். அறையின் உயரம் அதிகமாக இருக்க வேண்டும்.
பட்டாசு உற்பத்தி அறையின் உறுதி குறித்து அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுரைகளையும் அவர் வழங்கினார். தொடர்ந்து தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டார்.