/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கவுசிகா நதிக்கரையில் கொட்டப்பட்ட கட்டட கழிவுகள்
/
கவுசிகா நதிக்கரையில் கொட்டப்பட்ட கட்டட கழிவுகள்
ADDED : ஆக 05, 2024 07:24 AM

விருதுநகர் : விருதுநகர் கவுசிகா நதிக்கரையில் தொடர்ந்து கட்டட கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் அதை ஆக்கிரமிப்பு இடமாக பயன்படுத்தும் அபாயம் அதிகரித்து வருகிறது. இதனால் ஆற்றின் அகலம் குறைய வாய்ப்புள்ளது.
மதுரை மாவட்டம் மங்களரேவு காட்டுப்பகுதியில் உள்ள மழைநீர், வடமலைக்குறிச்சி கண்மாய் உபரிநீர் சேர்ந்து விருதுநகருக்குள் கவுசிகா நதியாக ஓடுகிறது.ஒரு காலத்தில் நன்றாக நீர் வரத்து இருந்த இந்த ஆற்றில் தற்போது கருவேல மரங்களும், கோரைப்புற்களுமே அதிகம் உள்ளன. இதனால் மழைக்காலங்களில் அடித்து வரப்படும் நீர் மட்டுமே செல்லும் நிலை உள்ளது.
விருதுநகர் கவுசிகா நதிக்கரையில் ஆக்கிரமிப்புகள் பெருகுவது சமீப காலத்தில் பெரிய பிரச்னையாக உள்ளது. அதற்கு செல்லும் நீர்வரத்து ஓடைகளும் குறுக்கப்பட்டுவருகின்றன.ஆனால் நீர்வளத்துறையினரோ எதன் மீதும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.ஜே.சி.பி., வேன்கள் போன்ற வாகனங்களை நிறுத்த இது போன்ற கரைகளை ஆக்கிரமிக்கின்றனர்.
ஆக்கிரமிப்பாளர்களுக்கு அரசியல் செல்வாக்கும், ஆளுங்கட்சியினரின் வழிகாட்டுதலும் அமோகமாக இருப்பதால் அதிகாரிகள் கண்டு கொண்டாலும் பயனில்லாத சூழல் தான் உள்ளது. விருதுநகர் கவுசிகா நதியை துார்வார வேண்டும், கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் ஆக்கிரமிப்புக்கு தான் வழி உண்டாக்கி தருகின்றனர்.
இதனால் மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். நகர்ப்பகுதிகளில் புதிய கட்டடங்கள் கட்டப்படுவதால் பழைய கட்டட கழிவுகளை முறைப்படி நகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும்.ஆனால் அதை ஆக்கிரமிப்பாளர்கள் பெற்று கொண்டு கரையை மெத்தி வாகனங்களை நிறுத்த செய்கின்றனர்.
இதில் அரசியல் பின்புலம் இருந்தாலும் மாவட்ட நிர்வாகத்தின் துணையோடு வருவாய்த்துறையினர், நீர்வளத்துறையினர் கூட்டாய்வு செய்து கரையை ஆக்கிரமித்துள்ளதை சரி செய்ய வேண்டும். இது போன்று நீர்நிலைகளில் கட்டட கழிவுகளை கொட்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.இல்லாவிட்டால் கவுசிகா நதி வழித்தடம், நீர்வரத்து ஓடைகளின் வழித்தடம் குறுகி மழைக்காலங்களில் நீரானது குடியிருப்புக்குள் புகும் அபாயம் ஏற்படும்.