/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாலவநத்தம் கண்மாய் தடுப்பணை சேதம்
/
பாலவநத்தம் கண்மாய் தடுப்பணை சேதம்
ADDED : மே 02, 2024 04:59 AM

விருதுநகர்: விருதுநகர் அருகே பாலவநத்தம் கண்மாய்க்கு செல்லும் நீர்வரத்து ஓடையில் அமைக்கப்பட்ட தடுப்பணை சிதிலமடைந்து உள்ளது. இதனால் நீரை தடுப்பணையில் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
டிச. 18, 19 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் அனைத்து கண்மாய், நீர்நிலைகளிலும் தண்ணீர் நிறைந்தது. பாலவநத்தம் கண்மாயிலும் நீர் நிறைந்து மறுகால் பாய்ந்தது. ஆனால் கண்மாயில் மராமத்து பணிகள் மேற்கொள்ளாததால் முட்புதர்கள் அடர்ந்து காடு போல காணப்பட்டது. நீர் நிறைந்தும் முட்புதர்கள் இருந்ததால் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையே இருந்தது.
மேலும் கோடை வெயிலின் தாக்கத்தாலும் நீர் வற்றி விட்டது. கண்மாயில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ளாததால் வெயிலில் நீர் வேகமாக வற்றி வைகாசி பட்டத்திற்கு உழவு பணிகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும் கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு வரும் நீர்வரத்து ஓடைகளையும் முறையாக சீரமைக்கவில்லை. அதே போல தடுப்பணையின் கற்கள் முற்றிலும் சேதமாகி சிதிலமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இதனால் மழைக்காலங்களில் கிடைக்கும் நீரை சேமித்து வைக்க முடியாமல் மொத்தமாக வெளியேறி விடுகிறது.
எனவே பாலவநத்தம் கண்மாய் தடுப்பணையை சீரமைத்து, முட்புதர்களை அகற்றி மராமத்து பணிகளை மேற்கொண்டு வரும் காலங்களில் தண்ணீரை சேமிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

