/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வீட்டின் கூரை சேதம்; செயல்படாத சுகாதார வளாகம்: சிரமத்தில் விருதுநகர் ரோசல்பட்டி இந்திரா காலனி மக்கள்
/
வீட்டின் கூரை சேதம்; செயல்படாத சுகாதார வளாகம்: சிரமத்தில் விருதுநகர் ரோசல்பட்டி இந்திரா காலனி மக்கள்
வீட்டின் கூரை சேதம்; செயல்படாத சுகாதார வளாகம்: சிரமத்தில் விருதுநகர் ரோசல்பட்டி இந்திரா காலனி மக்கள்
வீட்டின் கூரை சேதம்; செயல்படாத சுகாதார வளாகம்: சிரமத்தில் விருதுநகர் ரோசல்பட்டி இந்திரா காலனி மக்கள்
ADDED : ஆக 26, 2024 05:44 AM

விருதுநகர்:
வீட்டின் கூரை சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து எப்போது இடிந்து விழும் என்ற அச்சம், ரோடு, வாறுகால் சேதம், ஜல் ஜீவன் குழாய்களில் குடிநீர் விநியோகம் இல்லை, செயல்படாத சுகாதார வளாகம் என எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் விருதுநகர் ரோசல்பட்டி இந்திரா காலனி மக்கள்.
விருதுநகர் அருகே உள்ள ரோசல்பட்டி ஊராட்சியில் 1998 - 99 ஆண்டு 25 தொகுப்பு வீடுகள் 25 குடும்பங்களுக்கு என இந்திரா காலனி உருவானது. ஆனால் தற்போது ஒரு வீட்டில் மூன்று குடும்பங்கள் என 25 வீடுகளில் 150 குடும்பங்கள் உள்ளது. தனியாக ரேஷன் கார்டு விண்ணப்பிக்க முடியாததால் அத்தியாவசியப் பொருட்கள் பெற முடியாத நிலை நீடிக்கிறது. இதனால் பல குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமை த் தொகை பெற முடியவில்லை.
வீடுகளின் கூரையில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து எப்போது இடிந்து விழும் என்ற அச்சத்தில் வசிக்கின்றனர். இங்குள்ள வாறுகால் முழுவதும் சேதமாகி உள்ளது. ரோட்டின் மறுபுறத்தில் வாறுகால் அமைத்து தருவதாக கூறி இதுவரை அமைக்கப்படவில்லை. ஜல் ஜீவன் குடிநீர் குழாய் பதிப்பதற்காக ரோட்டை தோண்டிய நிலையில் பணிகள் முடிந்தும் ரோடு சீரமைக்கப்படவில்லை.
குழாய்கள் அமைத்த சில நாள்கள் வந்த குடிநீர் கடந்த மூன்று மாதங்களாக விநியோகம் இல்லை. இங்கு கட்டப்பட்ட சுகாதார வளாகத்தில் மோட்டார், குழாய்கள் பொருத்தப்படாமல் 3 ஆண்டுகளாக இருப்பதால் செயல்படுத்தப்படவில்லை. சமுதாயக்கூடம் இல்லாததால் வீட்டு விசேஷங்கள் நடத்த தனியார் மண்டபத்திற்கு அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது.
தொகுப்பு வீடுகளில் பலவும் கூரை சேதத்தால் இடிந்து விழும் நிலையில் உள்ளது. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இங்கு புதிய தொகுப்பு வீடுகள், ஜல் ஜீவன் குழாய்களில் குடிநீரும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நாகராணி, குடும்பத்தலைவி.
இங்கு புதிதாக வாறுகால் கட்டி கழிவு நீர் தடையின்றி செல்லும் வகையில் அமைக்க வேண்டும். ரோடு சேதமாகி பல ஆண்டுகளாகியும் சீரமைக்கப்படவில்லை. இதை சரிசெய்து வாகனங்கள் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
- நாகராஜன், தனியார் ஊழியர்.
ரோசல்பட்டி இந்திரா காலனியில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யப்படாததால் பயன்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது. இதனால் வீட்டில் கழிப்பறை வசதி இல்லாதவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
- ஆறுமுகம், கேட்டரிங் தொழில்.