/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமான மேல்நிலை தொட்டி, சுகாதார வளாகம்
/
சேதமான மேல்நிலை தொட்டி, சுகாதார வளாகம்
ADDED : ஜூலை 02, 2024 06:30 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முள்ளிக்குளம் ஊராட்சியில் மேல்நிலை தண்ணீர் தொட்டி, கலையரங்கம், சுகாதார வளாகம், சுடுகாடு போன்ற பொது பயன்பாட்டு கட்டடங்கள் பழமையடைந்தும், சேதமடைந்தும் காணப்படுகிறது. போதிய தூய்மை பணியாளர்கள் இல்லாமல் கொசு தொல்லை, சுகாதாரக் கேடு உட்பட பல்வேறு குறைபாடுகளுடன் அப்பகுதி மக்கள் வசித்து வருகின்றனர்.
முள்ளிக்குளம், மேட்டுமுள்ளிகுளம் ஆகிய இரு கிராமங்களை கொண்டது இந்த ஊராட்சி. மழைக்காலங்களில் அரசு பள்ளியை சுற்றி தண்ணீர் தேங்குகிறது. நூலக கட்டடம் பழமையடைந்துள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் ரோடுகள் சில இடங்களில் சமமற்று காணப்படுகிறது.
முள்ளிகுளம் சுடுகாட்டில் காம்பவுண்ட் சுவர், குளியல் தொட்டிகள் இல்லை. இங்குள்ள இரண்டு ஊருணிகளும் கழிவுகள் தேங்கியும், தடுப்பு சுவர் இல்லாமலும் உள்ளது. மேல்நிலை தண்ணீர் தொட்டி , கலையரங்கம் சேதமடைந்து காணப்படுகிறது. ஆண்களுக்கு சுகாதார வளாகம் இல்லாததால் திறந்தவெளியை பயன்படுத்துகின்றனர். வடக்கு தெருவில் பெண்கள் சுகாதார வளாகம் சேதமடைந்தும், இடிந்து விடும் நிலையும், அதனை சுற்றி சுகாதாரக் கேடும் காணப்படுகிறது.
ஊராட்சியில் போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் தெருக்களில் வாறுகால்களில் கழிவுகள் தேங்கி சுகாதாரத் கேடு, கொசு தொல்லை காணப்படுகிறது. மேட்டு முள்ளி குளத்தில் குறுகிய தெருக்களில் முறையான வாறுகால் வசதி செய்து தர வேண்டும் அங்குள்ள சுடுகாடும் சேதமடைந்து காணப்படுகிறது. இத்தகைய குறைபாடுகளை சரி செய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.