/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமடைந்த தாய் சேய் நல விடுதி, வாறுகால் இல்லை
/
சேதமடைந்த தாய் சேய் நல விடுதி, வாறுகால் இல்லை
ADDED : மே 28, 2024 06:29 AM

காரியாபட்டி, : இடியும் நிலையில் உள்ள மேல்நிலைத் தொட்டி, சமுதாயக்கூடம், சேதமடைந்த தாய் சேய் நல விடுதி, கழிவு நீர் செல்ல வாறுகால் வசதி இல்லாதது, அடிப்படை வசதிகள் இல்லாத மயானம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் இன்றி காரியாபட்டி பிசிண்டி ஊராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர்.
இந்த ஊராட்சியில் பிசிண்டி, அச்சங்குளம், வடகரை கிராமங்கள் உள்ளன. பிசிண்டியில் சமுதாயக்கூடம் இல்லாததால் சுப நிகழ்ச்சிகள் நடத்த மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். நாடக மேடை இல்லாதது பொது நிகழ்ச்சிகள் நடத்த சிரமம் ஏற்படுகிறது. ஆதிதிராவிடர் காலனியில் ஒரு சில வீதிகளில் பேவர் பிளாக் கற்கள் பதிக்காததால் மழை நேரங்களில் சேரும் சகதியமாகி மக்கள் நடமாட முடியாத நிலை உள்ளது.
வாறுகால் பணியை முழுமையாக முடிக்காததால் கழிவு நீர் செல்ல வழி இன்றி வீதியில் தேங்குகிறது. கொசு உற்பத்தியாகி பகலிலே கடிக்கிறது. மயான வசதி கிடையாது. குண்டாற்று கரையில் திறந்தவெளியில் எரியூட்டப்படுகிறது. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தனித்தனியாக மயானம் இருப்பதால், அங்கு அடிப்படை வசதிகள் இன்றி பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வடகரையில் சில வீதிகளில் வாறுகால் வசதி கிடையாது. ரோடு மட்டத்திலிருந்து வீதிகள் பள்ளமாக இருப்பதால் மழைநீர் தேங்கி வடிய நாட்களாகிறது. கழிவு நீர் ஒரே இடத்தில் தேங்கி நிற்கிறது.
அச்சங்குளத்தில் சில வீதிகள் மண் தரைகளாக இருப்பதால் மழை நேரங்களில் சேரும் சகதியுமாகி மக்கள் நடமாட முடியவில்லை. வாறுகால் வசதி சரிவர இல்லை. கழிவு நீர் தேங்குகிறது. தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.