ADDED : செப் 03, 2024 04:46 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் டி.ஏ.பி., உரம் தட்டுப்பாடு நிலவுவதால் சூப்பர் பாஸ்பேட்டை பயன்படுத்த வேளாண்துறை அறிவுறுத்தி வருகிறது.
மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை நெல் 1496 எக்டேர் ,சிறுதானியங்கள் 329 எக்டேர் , பயறு வகைகள் 277 எக்டேர் ,எண்ணெய் வித்து பயிர்கள் 662 எக்டேர் ,பருத்தி 319 எக்டேர் பரப்பிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த சாகுபடிக்கு தேவையான உரங்கள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
கூட்டுறவு, தனியார் உரம் விற்பனை நிலையங்களில் யூரியா 3491 டன், டி.ஏ.பி., 780 டன், பொட்டாஷ் 393, காம்ப்ளக்ஸ் உரங்கள் 2339 டன் விவசாயிகளின் தேவைக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் ஜெயசீலன் கூறியதாவது: விவசாயிகள் பயிர் சாகுபடிக்கு டி.ஏ.பி., உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரம், காம்பளக்ஸ் உரங்களை பயன்படுத்தலாம். சூப்பர் பாஸ்பேட் உரத்தில் பயிர்களுக்கு தேவையான பாஸ்பரஸ், சல்பர், கால்சியம் போன்ற கூடுதல் சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த உரம் பெரும்பாலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. சூப்பர் பாஸ்பேட் உரத்தை எண்ணெய் வித்து பயிர்களில் டி.ஏ.பி., உரத்துக்கு மாற்றாக பயன்படுத்தும் போது மகசூல் அதிகரிப்பதுடன் எண்ணெய் அளவும் அதிகரிக்கிறது. எள், சூரியகாந்தி போன்ற எண்ணெய் வித்து பயிர்களுக்கு சல்பர் சத்து அவசியம்.
மண்ணில் டி.ஏ.பி., உரமிடும் போது மண்ணில் ஏற்படுத்தும் உப்பு நிலையை விட சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்தும் போது குறைவாகவே உப்பு நிலை ஏற்படுத்துவதா ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அதிகப்படியாக டி.ஏ.பி., உரத்தை பயன்படுத்துவது ம்ணணில் உள்ள ஊட்ட சத்துக்களின் சமநிலையை பாதிக்கிறது. எனவே விவசாயிகள் டி.ஏ.பி., உரத்திற்கு பதிலாக சூப்பர் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தி பயன்பெறலாம். இதற்காக மாவட்டத்தில் 214 சூப்பர் பாஸ்பேட் உரம், 2334 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் உரம் கிடைப்பதில் பிரச்னை, ரசீது இல்லாமல் விற்பனை செய்வது, அதிக விலைக்கு விற்பனை செய்வது, பிற உரங்களை வாங்க கட்டாயப்படுத்துவது, உரம் பதுக்கல் பற்றிய புகார்களை அந்தந்த பகுதிகளுக்கான வட்டார வேளாண் உதவி இயக்குனரிடம் விவசாயிகள் தெரிவிக்கலாம் என்றார்.
மேலும் வேளாண்துறையினர் கூறுகையில் மாவட்டத்திற்கு தேவையான டி.ஏ.பி., உரங்கள் கூடுதலாக பெறவும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது என்றனர்.