/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாண்டியர் கால மடை கல்வெட்டு கண்டுபிடிப்பு
/
பாண்டியர் கால மடை கல்வெட்டு கண்டுபிடிப்பு
ADDED : மே 06, 2024 12:16 AM

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே பாண்டியர் கால மடை கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை அருகே பண்ணை மூன்றடைப்பில் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த தொல்லியல் ஆர்வலர்கள் ராஜபாண்டி, விஜயராகவன், சரத்ராம் ஆகியோர் கள ஆய்வு செய்தனர். அதில் கி.பி., 13 ம் நூற்றாண்டை சேர்ந்த மடை கல்வெட்டை கண்டுபிடித்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: குளம், கண்மாயில் சேரும் தண்ணீரை வீணாக்காமல் தடுத்து பாசன வசதிக்காக பயன்படுத்துவதற்கு அமைக்கப்படும் ஒரு அமைப்பு மடை ஆகும். இது போன்ற அமைப்பு தற்போது பண்ணை மூன்றடைப்பு கிராமத்தில் உள்ள செங்குளத்தில் காணப்படுகிறது. இந்த குளத்தின் நீர்மட்ட அளவு கல்லில் உள்ள துாணில் மேலே 10 அடி உயரத்தில் அழகிய வடிவமைப்புடன் உள்ள தூணில் மேற்புறத்திலும், பக்கவாட்டிலும் எழுத்துக்கள் உள்ளன. இந்த எழுத்துக்களை ஓய்வு பெற்ற தொல்லியல் இயக்குனர் சாந்தலிங்கம் உதவியோடு படிக்கப்பெற்றது.
இந்த கல்வெட்டு 13ம் நூற்றாண்டின் பாண்டிய காலத்தைச் சேர்ந்தது. கல்வெட்டின் சில பகுதிகள் சிதைந்து உள்ளதால் மன்னர் பெயர் அறிய முடியவில்லை. வெண்புநாடு என்னும் நாட்டு பிரிவிற்குள் அடங்கிய கட்டங்குடி, கும்மணங்காடு, நத்தகுளம் ஆகிய 3 ஊர்களுக்கும் பொதுவான மடை. அதை புதுப்பித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட செய்தி இக்கல்வெட்டில் கூறுகிறது.
வெண்பு நாடு என்பது அருப்புக்கோட்டை, கோவிலாங்குளம், பந்தல்குடி, காரியாபட்டி ஆகிய ஊர்களை உள்ளடக்கியது. கல்வெட்டில் கூறப்பட்டுள்ள நத்தகுளம், கட்டங்குடி ஊர்கள் தற்போது இதே பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. கும்மணங் காடு என்ற ஊர் மட்டும் எங்கு இருக்கிறது என்பதை அறிய முடியவில்லை, என்றனர்.