/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நெல் கொள்முதல் நிலையங்களுக்கு லாரிகளை அனுப்புவதில் பாரபட்சம்
/
நெல் கொள்முதல் நிலையங்களுக்கு லாரிகளை அனுப்புவதில் பாரபட்சம்
நெல் கொள்முதல் நிலையங்களுக்கு லாரிகளை அனுப்புவதில் பாரபட்சம்
நெல் கொள்முதல் நிலையங்களுக்கு லாரிகளை அனுப்புவதில் பாரபட்சம்
ADDED : பிப் 28, 2025 07:15 AM
நரிக்குடி: நரிக்குடி பகுதி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூடைகளை ஏற்றிச் செல்ல லாரிகளை அனுப்புவதில் பாரபட்சம் காட்டுவதால் தேக்கம் அடைந்து பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
நரிக்குடி பகுதியில் விளையும் நெல்களை கொள்முதல் செய்ய அரசு கொள்முதல் நிலையங்களை திறந்தன. இந்த ஆண்டு பெரும்பாலான இடங்களில் நிலையங்கள் திறக்கப்படவில்லை. அ.முக்குளம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மட்டுமே கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. அப்பகுதியில் விளைந்த நெல்களை விற்பனைக்கு கொண்டு செல்லும் விவசாயிகளிடமிருந்து தினமும் 1000 நெல் மூடைகளையாவது கொள்முதல் செய்ய வேண்டும்.
சுற்றி உள்ள நிலையங்கள் செயல்படாததால் பெரும்பாலான விவசாயிகள் அ.முக்குளம் கொண்டு செல்கின்றனர். நெல் மூடைகளை ஏற்றிச் செல்ல லாரிகள் சரிவர வராததால் 15 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. 500 மூடைகளுக்கு மேல் கொள்முதல் செய்வதை நிறுத்துகின்றனர். மழை வெயிலுக்கு விவசாயிகள் பாதிக்கப்படுவதால் கவலை தெரிவித்தனர்.
விவசாயிகள் கூறியதாவது: பெரும்பாலான இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. அ. முக்குளத்தில் மற்றும் ஒரு சில இடங்களில் செயல்படுவதால் இங்கு கொண்டு வரவேண்டிய சூழ்நிலை உள்ளது. மூடைகளை கொள்முதல் செய்த பின் அன்றாடம் லாரிகளில் ஏற்றி குடோனுக்கு கொண்டு செல்ல வேண்டும். லாரிகளை அனுப்புவதில் டெண்டர் எடுத்தவர்கள் பாரபட்சம் காட்டுவதால் 3 நாட்களாக லாரிகள் வரவில்லை. அப்படியே வந்தாலும் குறைந்த அளவு எண்ணிக்கையில் லாரிகள் வருகின்றன.
விவசாயிகளிடமிருந்து வாங்கும் நெல் மூடைகள் இருப்பு வைக்கப்பட்டால் எடை குறையும் என்பதால் அலுவலர்கள் வாங்க மறுக்கின்றனர். இதுதான் பல்வேறு பிரச்னைக்கு காரணமாக அமைகிறது. அதிக வாடகை கொடுக்கும் இடங்களுக்கு லாரிகளை அனுப்பி வருவதால் இங்கு மூடைகள் தேக்கமடைகின்றன. மழை வெயிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்கிற கவலை ஏற்பட்டுள்ளது. சீராக லாரிகளை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.