/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சதுரகிரியில் குடிநீர், மருத்துவ வசதிகள் தேவை
/
சதுரகிரியில் குடிநீர், மருத்துவ வசதிகள் தேவை
ADDED : ஜூலை 25, 2024 03:56 AM

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு அங்கு போதிய அளவிற்கு குடிநீர், மருத்துவ வசதிகள்செய்து தர வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
இந்த ஆண்டும் ஆக.1ல் பிரதோஷ வழிபாடு, ஆக. 2ல் சிவராத்திரி சிறப்பு பூஜை, ஆக. 4ல் ஆடி அமாவாசை வழிபாடு நடக்கிறது. வழக்கம்போல் இதில் அதிகளவில் வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு மாதமாக போதிய மழை இல்லாததால் சதுரகிரியில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து மிகவும் குறைந்த அளவே உள்ளது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புள்ளது.
எனவே, தாணிப்பாறை மலை அடிவாரத்தில் இருந்து கோயில் வரை 500 மீட்டர் தூர இடைவெளியில் ஒரு பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட வேண்டும்.
இதேபோல் மலையேறும் பக்தர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டால் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் நவீன மருத்துவவசதிகள் கொண்ட மருத்துவ குழுவினர், அடிவாரத்தில் இருந்து கோயில் வரை 5 இடங்களில் 24 மணி நேரமும் செயல்படுவதை விருதுநகர், மதுரை மாவட்ட மருத்துவத்துறையினர் செய்ய வேண்டும்.
மேலும் போதிய பஸ் வசதிகள், 24 மணி நேரமும் தண்ணீருடன் கூடிய சுகாதார வளாக வசதிகள் செய்து தர வேண்டுமென சதுரகிரி பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.