/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆர்.டி.ஐ., சட்டத்தில் விரைவான பதில்களுக்கு எதிர்பார்ப்பு; தாமதத்தால் மனுதாரர்கள் தவிக்கும் சூழல்
/
ஆர்.டி.ஐ., சட்டத்தில் விரைவான பதில்களுக்கு எதிர்பார்ப்பு; தாமதத்தால் மனுதாரர்கள் தவிக்கும் சூழல்
ஆர்.டி.ஐ., சட்டத்தில் விரைவான பதில்களுக்கு எதிர்பார்ப்பு; தாமதத்தால் மனுதாரர்கள் தவிக்கும் சூழல்
ஆர்.டி.ஐ., சட்டத்தில் விரைவான பதில்களுக்கு எதிர்பார்ப்பு; தாமதத்தால் மனுதாரர்கள் தவிக்கும் சூழல்
ADDED : மார் 03, 2025 07:13 AM
காரியாபட்டி: தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்களுக்கு பதில் தர பெரும்பாலான சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் காலதாமதம் செய்வது, தவறான பதில்கள் தருவது, அலட்சியப் போக்குடன் செயல்படுவது என உரிய நேரத்தில் பதில் அளிக்காமல் அலைக்கழிப்பதால், விண்ணப்பதாரர்கள் தவிக்கும் சூழல் இருந்து வருகிறது. விரைந்து பதில் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுதாரர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தகவல்களை எளிதில், மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அரசு துறைகளில் நடந்த வளர்ச்சி திட்ட பணிகள், நிதி ஒதுக்கீடு, அரசியல் தலைவர்களின் விவரங்கள், நிறைவேற்றிய, நிறைவேற்றப்படாத திட்டங்கள் குறித்து யாருக்கு என்ன விவரங்கள் தேவைப்படுகிறதோ அதனைத் தெரிந்து கொள்ள, தகவல்கள் பெற முடியும். விண்ணப்பித்த நாட்களில் இருந்து 30 நாட்களுக்குள் உரிய தகவல்களை தெளிவாக குறிப்பிட்டு சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு தபால்கள் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். துவக்கத்தில் நல்ல முறையில் செயல்பட்டு வந்தது.
நாளடைவில் தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்களுக்கு உரிய தகவல்கள் கொடுக்காமல் காலதாமதப்படுத்தி, அலட்சிய போக்குடன் சிலர் செயல்படுகின்றனர். 30 நாட்களைக் கடந்தும் கண்டும் காணாமல் இருக்கின்றனர். விண்ணப்பங்கள் குறித்து நேரடியாக தொடர்புகொண்டு கேட்டால் விண்ணப்பதாரர்களை சிலர் அவமரியாதை செய்கின்றனர். உள்ளாட்சி அமைப்புகள் சார்பாக நடந்த பணிகள் குறித்து விவரம் கேட்டால் முறையான பதில் அளிப்பதில்லை. இதே நிலைமைதான் வருவாய்த்துறை, போக்குவரத்து, போலீஸ் துறைகளிலும் உள்ளது.
சட்டத்தின் நோக்கமே தவறுகள் நடக்கும் போக்கை குறைப்பதற்காகத்தானே தவிர, வேறு நோக்கங்கள் இருப்பதாக தெரியவில்லை. ஒவ்வொரு அரசு துறையிலும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் விண்ணப்பங்களின் நிலை என்ன என்பதை அறிந்து அளிக்கப்பட்ட பதில்கள் என்ன, காலதாமதத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். அலட்சியம் செய்பவர்கள் மீது மேல் முறையீடு செய்தால் என்ன வகையான சட்ட திட்டங்களின் கீழ் பாதிக்கப்படுவர் என்கிற விவரங்களை தெரியப்படுத்த வேண்டும்.
காலதாமதத்தால் மனுதாரர்கள் தவிக்கும் சூழல் இருந்து வருகிறது. அலட்சியப் போக்குடன் செயல்படாமல், விண்ணப்பங்களுக்கு விரைந்து பதில் அளிக்க மனுதாரர்கள் எதிர்பார்க்கின்றனர்.