/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் லாரி முனையம் அமைக்க எதிர்பார்ப்பு
/
சிவகாசியில் லாரி முனையம் அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : மார் 08, 2025 04:31 AM

சிவகாசி : சிவகாசி சிறுகுளம் கண்மாய்க்கரை, திருத்தங்கல் ரோடு, பைபாஸ் ரோடு உள்ளிட்ட நகரின் போக்குவரத்து நிறைந்த முக்கிய ரோடுகளில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதோடு விபத்திற்கு வழி ஏற்படுகிறது.
எனவே சிவகாசியில் லாரி முனையம் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழில் இருப்பதால் அதிக அளவில் கனரக வாகனங்கள் வருகின்றன.
சிவகாசிக்கு மூலப் பொருட்களை கொண்டு வருவதற்கும் உற்பத்தி பொருட்களைக் கொண்டு செல்வதற்காக தினமும் 200 க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன.
ஆனால் இந்த வாகனங்களை தனியாக நிறுத்துவதற்கு என லாரி முனையம் இல்லை.
இதனால் நகருக்கு சரக்குகள் ஏற்றி வருகின்ற கனரக வாகனங்கள் அனைத்தும் திருத்தங்கல் ரோடு, சிறுகுளம் கண்மாய்க்கரை ரோட்டில் ஒரு கிலோ மீட்டர் துாரத்திற்கு அடுத்தடுத்து நிறுத்தப்படுகின்றது.
இதனால் போக்குவரத்து பாதிப்பதோடு விபத்திற்கும் வழி ஏற்படுகிறது.
தவிர விருதுநகர் பழைய ரோடு, சாத்துார் ரோடு, பைபாஸ் ரோடு, வேலாயுத ரஸ்தா ரோடு உள்ளிட்ட போக்குவரத்து நிறைந்த இடங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் லாரிகளை நிறுத்தி விடுகின்றனர்.
ஒரே நேரத்தில் 50 க்கும் மேற்பட்ட வாகனங்கள் ரோட்டில் இருபுறமும் நிறுத்தப்படுவதால் பள்ளி கல்லுாரி பஸ்கள், நகர் பஸ்கள் இதனை கடப்பதற்கு பெரிதும் சிரமப்படுகின்றன.
மேலும் டூவீலரில் செல்பவர்கள் அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளது. பட்டாசுகளை ஏற்றி செல்லும் லாரிகள் நகருக்குள் நிறுத்தப்படும் போது அசம்பாவிதம் ஏற்படுவதற்கு வாய்ப்பளிக்கும்.
தற்போது சிவகாசி சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வருகின்றது. இதனால் நகரே போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றது.
இந்நிலையில் கனரக வாகனங்களையும் போக்குவரத்து நிறைந்த ரோட்டிலேயே நிறுத்தப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.
எனவே சிவகாசியில் உடனடியாக லாரி முனையம் அமைக்க வேண்டும்.
அல்லது தற்காலிகமாக விஸ்வநத்தம் ரோட்டில் உள்ள பயன்பாட்டில் இல்லாத மீன் மார்க்கெட்டினை வாகனங்கள் நிறுத்துவதற்கு பயன்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
முனீஸ்குமார், தொழிலதிபர்: சிவகாசிக்கு அதிக அளவில் கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. ஆனால் இந்த வாகனங்கள் நிறுத்துவதற்கு இடமில்லாததால் வேறு வழி இன்றி போக்குவரத்து நிறைந்த ரோடுகளில் நிறுத்தப்படுகின்றது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு விபத்தும் ஏற்படுகிறது. எனவே சிவகாசியில் உடனடியாக லாரி முனையம் அமைக்க வேண்டும்.
ஆத்தீஸ்வரன், தொழிலதிபர்: வெகு தொலைவில் உள்ள நகரங்களில் இருந்து சிவகாசிக்கு மூலப் பொருட்களை கொண்டு வருகின்ற வாகனங்கள் மீண்டும் காலியாக செல்ல வழி இல்லை.
எனவே மீண்டும் வாகனத்தை நிரப்பி செல்வதற்காக ஒன்றிரண்டு நாட்கள் சிவகாசியிலேயே காத்திருக்க வேண்டும்.
ஆனால் இதற்காக தனி இடம் இல்லை. இதனாலேயே வாகனங்கள் ரோட்டில் நிறுத்தப்படுகின்றது.
ஆத்தீஸ்வரன்