/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வெயிலால் வெம்பக்கோட்டை அணை நீர்மட்டம் குறைந்தது: மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள்
/
வெயிலால் வெம்பக்கோட்டை அணை நீர்மட்டம் குறைந்தது: மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள்
வெயிலால் வெம்பக்கோட்டை அணை நீர்மட்டம் குறைந்தது: மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள்
வெயிலால் வெம்பக்கோட்டை அணை நீர்மட்டம் குறைந்தது: மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள்
ADDED : செப் 06, 2024 04:41 AM

சிவகாசி வெம்பக்கோட்டையில் வைப்பாறு அணை 1986 ல் கட்டப்பட்டது. 23 அடி உயரம் கொண்ட அணையில் 5 மதகுகள் உள்ளது. வெம்பக்கோட்டை, சூரார்பட்டி, கோட்டைபட்டி, கரிசல்குளம், சல்வார்பட்டி, ஏழாயிரம்பண்ணை, விஜய கரிசல்குளம் உட்பட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3300 ஹெக்டேர் பாசன வசதி உடையது.
அணையிலிருந்து சிவகாசி மாநகராட்சிக்கு தினமும் 20 லட்சம் லிட்டர் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. அணையை சற்றியுள்ள கிராம பகுதியில் கிணற்று பாசனத்திலும் விவசாய பணிகள் நடைபெறுகிறது.
வெம்பக்கோட்டை அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து காயல்குடி, சீவலப்பேரி உள்ளிட்ட கிளை ஆறுகளில் இருந்து தண்ணீர் வருகின்றது. இந்நிலையில் 2023 இறுதியில் தொடர் மழை பெய்ததில் அணை முழுமையாக நிறைந்து தண்ணீர் வெளியேற்றும் நிலை ஏற்பட்டது. தொடர்ந்து கோடை காலம் துவங்கிய நிலையில் 23 அடி உயரம் உள்ள அணையில் மார்ச் 10 ல் 20 அடி உயரம் வரை தண்ணீர் இருந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர்.
ஆனால் அடுத்தடுத்து வெயில் கொளுத்தியதால் நான்கடி குறைந்து 16 அடி மட்டுமே தண்ணீர் இருந்தது. அதே சமயத்தில் கோடை மழை பெய்ய துவங்கியதுமே அணையின் நீர்மட்டம் 17 அடியாக உயர்ந்தது. தற்போது மழை முடிந்து தொடர்ந்து வெயில் கொளுத்தி வருவதால் தண்ணீர் மட்டம் 14 அடியாக குறைந்துவிட்டது. தவிர ஐந்து ஷட்டர்களில் இரு ஷட்டர்களில் எப்போதுமே தண்ணீர் கசிந்து வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதனாலும் தண்ணீர் மட்டம் குறைந்தது.
தற்போது ஷட்டரில் பராமரிப்பு பணி நடந்து வருகின்றது. இப்பணி விரைந்து முடித்து தண்ணீர் கசிவதை நிறுத்த வேண்டும். பருவ மழை பெய்து அணைக்கு தண்ணீர் வர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.