ADDED : மே 16, 2024 06:05 AM

காரியாபட்டி : காரியாபட்டி மாந்தோப்பில் நடந்த மீன் பிடி திருவிழாவில் 50க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பங்கேற்றதுடன் தலா 50 கிலோ வரை மீன்கள் கிடைத்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
காரியாபட்டி பகுதியில் சென்ற ஆண்டு பெய்த கனமழைக்கு மாந்தோப்பு கண்மாய் நிரம்பியது. கண்மாயில் மீன்கள் வளர்க்க முடிவு செய்யப்பட்டு, ஊராட்சி சார்பாக 18 ஆயிரம் மீன் குஞ்சுகள் வாங்கி விடப்பட்டன. நன்கு வளர்ந்த நிலையில் தண்ணீர் வற்றியதால் மீன்கள் வெயிலுக்கு கரை ஒதுங்கியது. மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, நேற்று மீன்பிடி திருவிழா நடந்தது.
ஊராட்சித் தலைவர் சரவணன் துவக்கி வைத்தார். தகவல் அறிந்து சுற்றி உள்ள வையம்பட்டி, அச்சங்குளம், பிசிண்டி, மேலத்துலுக்கன்குளம், அழகியநல்லூர், நந்திக்குண்டு, காரியாபட்டி உட்பட 50-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் மீன்களை பிடித்தனர். ஒவ்வொருவரும் தலா 50 கிலோவுக்கு மேல் பிடித்துச் சென்றனர். 10 டன்கள் வரை மீன்கள் இருந்தன. கட்லா, லோகு, சிசி, கெளுத்தி, விரால் உள்ளிட்ட மீன்கள் கிடைத்தன.