/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ராஜபாளையத்தில் நிற்காத மகளிர் இலவச பஸ்கள்
/
ராஜபாளையத்தில் நிற்காத மகளிர் இலவச பஸ்கள்
ADDED : ஆக 23, 2024 03:33 AM
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் இலவச பயணம் என்பதால் பெண்களை கண்டால் அரசு பஸ்கல் நிற்காமல் செல்வதால் குறிப்பிட்ட நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாமல் பெண்கள் அவதிப்படுகின்றனர்.
மகளிர் கட்டணம் இல்லாமல் நகர பஸ்களில் பயணம் செய்யும் அறிவிப்பு வந்ததும் அனைத்து தரப்பு பெண்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. பள்ளி கல்லுாரி மாணவியர், பணிக்குச் செல்லும் பெண்கள் என பல தரப்பினர் பயன் பெற்று வந்தனர்.
இதனால் பஸ்களை சுலபமாக அறிந்து கொள்ளும் விதமாக பஸ்சின் முன்புறமும் பின்னும் தனிப்பட்ட ரோஸ் கலர் மூலம் பிரித்து காணப்பட்டது. பெண்களிடம் வரவேற்பு எழுந்ததால் கோரிக்கைக்கு ஏற்ப வழித்தடங்களில் அதிகப்படியான பஸ்கள் இயக்கப்பட்டன.
இலவச பஸ் என்பதால் பெண் பயணிகளிடம் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது. வயது முதிர்ந்த பெண்கள் ஏற தாமதம் ஆனாலும் நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும் என உத்தரவு இடப்பட்டது.
இருப்பினும் ராஜபாளையத்தில் மெயின் நிறுத்தங்களில் பெண்களைக் கண்டால் டிரைவர்கள் பஸ்களை நிறுத்தி ஏற்றிச் செல்வதில்லை. அவ்வாறு ஏறிச் செல்லும் மாணவியர், தனியார் ஊழியர்களிடமும் சிடுசிடுப்பு காட்டுகின்றனர். குறிப்பாக சொக்கர் கோயில், சங்கரன்கோவில் முக்கு, சாந்தி தியேட்டர் பகுதியில் காத்திருக்கும் பெண்கள் கைகாட்டினாலும் மகளிர் பஸ்கள் கண்டுகொள்ளாமல் செல்வதும் நடக்கிறது.
இது குறித்து பயணிகளுக்கு புகார் தெரிவிக்கும் நடைமுறை தெரியாததால் புலம்பியபடி உள்ளனர். அரசு போக்குவரத்து அதிகாரிகள் இது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

