/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஊருணியில் கொட்டப்படும் கழிவுகள் கோடை மழை பெய்தும் பயனில்லை
/
ஊருணியில் கொட்டப்படும் கழிவுகள் கோடை மழை பெய்தும் பயனில்லை
ஊருணியில் கொட்டப்படும் கழிவுகள் கோடை மழை பெய்தும் பயனில்லை
ஊருணியில் கொட்டப்படும் கழிவுகள் கோடை மழை பெய்தும் பயனில்லை
ADDED : மே 29, 2024 05:09 AM

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலான ஊருணிகள் கழிவுநீர் சூழ்ந்து மோசமான நிலையில் காணப்படுகின்றன. மேலும் மேலும் குப்பை கொட்டி மேலும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது கோடை மழை பெய்தும் பயனில்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கோடையின் அக்னி நட்சத்திரம் மே 4 முதல் துவங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் அக்னி நட்சத்திரத்தில் வெயில் வாட்டி வதைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோடை மழை அதிகளவில் பெய்தது. மேலும் கோடையின் தாக்கம் மார்ச், ஏப்ரல் மாதங்களில் அதிகளவே இருந்தது. இந்நிலையில் ஊருணிகள் பல வறண்டிருந்தன.
நீர் இருந்த ஊருணிகளும் கழிவுகள் தேங்கி பயன்படுத்துவதற்கு லாயக்கற்றதாக இருந்தன. வறண்ட ஊருணிகளை துார்வாரி கோடை மழையில் நீரை தேக்க ஏதுவாக்க பல்வேறு கிராம மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதே போல் போன பருவமழைக்கு நிறைந்த ஊருணிகள் பல தற்போது வரை வற்றாமல் இருந்தாலும், அவற்றில் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள் தான் அதிகம் உள்ளன. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக நல்ல கோடை மழை பெய்ததில் ஊருணிகளில் நீர் தேங்கியது. இருப்பினும் குப்பையை அகற்றாததால் ஊருணிகள் மோசமான நிலையில் உள்ளன. இதனால் மழை பெய்தும் பயனில்லை என மக்கள் புலம்புகின்றனர்.
மேலும் கழிவுநீர் கலந்த ஊருணியால் நிலத்தடி நீரும், மண்வளமும் பாதிக்கப்படுகிறது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.