சாத்துார்: சாத்துார் அருகே மது போதை தகராறில் ஓட்டல் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சாத்துார் மேட்டமலை வீரபாண்டியாபுரம் காட்டுப் பகுதியில் ஆக. 1 காலை 6:30 மணிக்கு 45 வயது மதிக்க கூடிய அடையாளம் தெரியாத ஆண் தலையில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில் இறந்துகிடந்தார்.
அப்பகுதியில் நடைபயிற்சிக்கு சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்று உடலை கைப்பற்றியபோலீசார் சந்தேக மரணமாக வழக்குப்பதிந்து விசாரித்தனர். அங்குள்ள பட்டாசு கடை, டாஸ்மாக் கடைகளில் உள்ள சிசிடிவி காமிரா பதிவை சோதனை செய்தபோது ஆக.,1ல் அதிகாலை 1:00 மணிக்கு அங்கு காரில் 3 பேர் வருவதும் 3:00 மணிக்கு இருவர் மட்டும் காரில் செல்வதும் தெரியவந்தது.
போலீஸ் விசாரணையில் சிவகாசி போஸ் காலனியைச் சேர்ந்த ஓட்டல் தொழிலாளி மாரிராஜ் ,48. அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. மேலும் சிவகாசி போஸ் காலனியைச் சேர்ந்த ஹரிஹரன், 20. எம்.ஜி.ஆர் காலனியை சேர்ந்த சக்திவேல், 25. ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
போலீஸ் விசாரணையில் மூவரும் மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் மாரிராஜ், மது போதையில் அசிங்கமாக திட்டியதால் ஆத்திரமடைந்து இருவரும் அவரை சரமாரியாக அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இருவரையும் சாத்துார் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.