/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் அதிகரிக்கும் பாலிதீன் பயன்பாடு
/
சிவகாசியில் அதிகரிக்கும் பாலிதீன் பயன்பாடு
ADDED : ஜூலை 02, 2024 06:22 AM
சிவகாசி : சிவகாசி நகரில் மீண்டும் அதிகளவில் பாலிதீன் பயன்பாடு அதிகரித்து வருவதை தடுக்க அதிகாரிகள் அடிக்கடி ஆய்வில் ஈடுபட வேண்டும்.
அன்றாட வாழ்க்கையில் பாலிதீன் பைகளை அதிகளவில் மக்கள் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என 2019 ஜன. 1 முதல் தமிழகம் முழுவதும் பாலிதீன் பொருட்களுக்கு அரசு தடை விதித்தது. அதனை தொடர்ந்து பாலிதீன் பயன்பாடு குறைந்தது. கடைக்கு செல்லும் மக்கள் ஓரளவிற்கு மஞ்சப்பை உள்ளிட்டவைகளை கடைக்கு எடுத்து செல்ல பழகியிருந்தனர்.
ஆனாலும் சிவகாசி நகரில் பாலிதீன் பொருட்களின் பயன்பாடு நின்றபாடில்லை. நகர் பகுதியில் பெரும்பாலான இடங்களில் கொட்டப்படும் கழிவுகளில் 80 சதவீதம் பாலிதீன் பொருட்கள் உள்ளது. அந்தளவிற்கு பாலிதீன் பொருட்கள் பயன்பாட்டில் உள்ளது.
சிவகாசி வேலாயுத ரஸ்தா ரோடு, பழைய விருதுநகர் ரோடு, விளாம்பட்டி ரோடு, நாரணாபுரம் ரோடு, சாத்துார் ரோடு, மருதுபாண்டியர் தெரு, சிறுகுளம் கண்மாய், கட்டளைப்பட்டி ரோடு , கங்காகுளம் ரோடு, உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் குப்பைகளோடு தடைசெய்யப்பட்ட பாலிதீன் பைகளும் கொட்டப்படுகிறது.
மேலும் தண்ணீர் செல்லும் ஓடைகள், கண்மாய்களிலும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இவைகள் அகற்றப்படவில்லை. இதனால் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதார கேடும் ஏற்படுகிறது. பெரும்பாலான குடியிருப்புவாசிகள் தங்களது வீடு, கடைகளின் கழிவுகளான பாலிதீன் பை உள்ளிட்டவைகளை ரோட்டிலும் , ஓடையிலும் கொட்டுகின்றனர்.
மாநகராட்சி பணியாளர்கள் அவற்றை அவ்வப்போது அகற்றினாலும் மீண்டும் மீண்டும் குப்பை சேருகின்றது. இந்த பாலிதீன் பொருட்களை மாடு உள்ளிட்ட கால்நடைகள் தங்களது தீவனமாக கருதி சாப்பிடுகின்றன. மேலும் சிறிய மழை பெய்தாலும் ரோட்டில் உள்ள பாலிதீன் கவர்களில் மழைநீர் தேங்கி விடுகிறது. இதில் கொசு உற்பத்தியாகி ஏடிஸ் போன்ற கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் வருகிறது.
ஓட்டல், டீக்கடை உள்ளிட்ட சில கடைகளில் மட்டும் அவ்வப்போது பெயருக்கு சுகாதார ஆய்வாளர்கள் சோதனை நடத்தி அபராதம் விதிக்கின்றனர். ஆனால் பெரிய கடைகள் , மொத்த விற்பனை நிலையங்களை கண்டு கொள்வதில்லை. இதனாலேயே நகரில் அதிகளவு பாலிதீன் பயன்பாடு உள்ளது. எனவே அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.