/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நகராட்சிகளின் பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு; திட்ட பணிகளில் சிக்கல்கள், தவிப்பு ஏராளம்
/
நகராட்சிகளின் பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு; திட்ட பணிகளில் சிக்கல்கள், தவிப்பு ஏராளம்
நகராட்சிகளின் பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு; திட்ட பணிகளில் சிக்கல்கள், தவிப்பு ஏராளம்
நகராட்சிகளின் பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு; திட்ட பணிகளில் சிக்கல்கள், தவிப்பு ஏராளம்
ADDED : ஆக 21, 2024 06:31 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நகராட்சிகளின் பொறியியல் பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் உள்ளதால் புதிய குடிநீர், பாதாளசாக்கடை, நகரின் வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிப்பதிலும், ஆய்வு செய்வதிலும் தவிப்பும், சிக்கலும் ஏரளாமாகி அல்லாடி வருகின்றனர்.
மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சாத்துார் என 5 நகராட்சிகள் உள்ளன. ஒரு மாநகராட்சியாக சிவகாசி உள்ளது. இதில் விருதுநகர் நகராட்சியில் பொறியியல் பிரிவில் பணி ஆய்வாளர்கள் இருவர், வரைவாளர், எலக்ட்ரீஷியன் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் நகரில் புதிதாக நடந்து வரும் தாமிரபரணி குடிநீர் திட்ட பணிகளை கள ஆய்வு செய்ய வழி இல்லாத சூழல் உள்ளது. பணி ஆய்வாளர்கள் தான் களத்தில் ஆய்வு செய்வர். வரைவாளர், பிட்டர் ஆகியோர் தான் பாதாளசாக்கடை பணிகளில் எங்கேங்கு இணைப்பு உள்ளது என்பதை அறிந்து வைத்திருப்பர். பணியிடங்கள் காலியாக உள்ளதால் திண்டாட்டம் அதிகரித்துள்ளது.
சாத்துார் நகராட்சியில் சிவகாசி பொறியாளர் தான் கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். பிட்டர் விடுப்பில் உள்ளார். எலக்ட்ரிஷியன், வயர் மேன் இல்லை. பாதாளசாக்கடை திட்டம் 80 சதவீதம் முடிந்துள்ளது. தாமிரபரணி குடிநீர் திட்டம் 85 சதவீதம் முடிந்துள்ளது. அனுபவம் வாய்ந்த யாரும் இல்லாததால் குழாய் உடைப்பு உடைவதை சரி செய்ய முடிவதில்லை. புதிதாக வரும் ஒப்பந்த பணியாளர்கள் செய்வதால் திறம்பட கையாள்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. தெருவிளக்கு போடும் பணிகளில் தொய்வு நீடிக்கிறது.
அருப்புக்கோட்டை நகராட்சியில் பொறியாளர் பணியிடத்தை ராஜபாளையம் பொறியாளர் ஒரு மாதம் கூடுதல் பொறுப்பு பார்த்த நிலையில் தற்போது புதிய பொறியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி பணி ஆய்வாளர், வரைவாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. புது பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகளை கண்காணிப்பதிலும் சிக்கல் நீடித்து வருகிறது.
ராஜபாளையத்தில் நகரமைப்பு அலுவலர் காலியாக உள்ளது. ஆய்வாளர் பணியிடத்தில் ஒருவர் மட்டும் தான் உள்ளார். மற்ற இரு பணியிடங்கள் காலியாக உள்ளது. பொறியியல் பிரிவில் பணி ஆய்வாளர்கள் பற்றாக்குறை உள்ளது. ராஜபாளையத்தில் அம்ரூத் பாரத் திட்டம், பாதாளசாக்கடை, தாமிரபரணி திட்டம் போன்ற பணிகள் நடந்து வரும் நிலையில் பொறியியல் பிரிவின் காலி பணியிடங்களால் அல்லாடி வருகின்றனர்.
சிவகாசி மாநகராட்சியில் உதவி பொறியாளர்கள் 8 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 3 பேர் இருக்கின்றனர். வருவாய் பிரிவில் பற்றாக்குறை உள்ளது. கடந்த ஆண்டு நடந்த பணி வரன்முறையின் போது நிறைய நகராட்சிகளில் பணியிடங்கள் குறைக்கப்பட்டன. அதே போல் எலக்ட்ரிஷியன் உள்ளிட்ட பணியிடங்கள் தனியாருக்கு விடப்பட்டன. முன்பு போல் முழுவீச்சில் நகராட்சிகளின் செயல்பாடுகள் இல்லை. மக்கள் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை இல்லை. தெருவிளக்கு எரியவில்லை என்றாலோ, பைப்லைன் பழுது பற்றி புகார் அளித்தாலோ மிக தாமதமாகவே வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நகராட்சிகளில் தேவைப்படும் பணியிடங்களை கேட்டறிந்து நிரப்ப கோரிக்கை வைக்க வேண்டும்.