/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மழை பெய்தால் தீவு; சேற்றில் நடக்க முடியாமல் அவதி அருப்புக்கோட்டை நேதாஜி நகர் விரிவாக்க பகுதி மக்களின் அவலம்
/
மழை பெய்தால் தீவு; சேற்றில் நடக்க முடியாமல் அவதி அருப்புக்கோட்டை நேதாஜி நகர் விரிவாக்க பகுதி மக்களின் அவலம்
மழை பெய்தால் தீவு; சேற்றில் நடக்க முடியாமல் அவதி அருப்புக்கோட்டை நேதாஜி நகர் விரிவாக்க பகுதி மக்களின் அவலம்
மழை பெய்தால் தீவு; சேற்றில் நடக்க முடியாமல் அவதி அருப்புக்கோட்டை நேதாஜி நகர் விரிவாக்க பகுதி மக்களின் அவலம்
ADDED : ஜூன் 07, 2024 04:49 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நேதாஜி நகர் விரிவாக்கப் பகுதி மழை பெய்தால் வெள்ளம் சூழ்ந்து தீவாகவும், ரோடு இல்லாமல் இருப்பதால் சேற்றில் நடக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
அருப்புக்கோட்டை நகராட்சி 25-வது வார்டு நேதாஜி நகர். இதன் தொடர்ச்சியாக உள்ள விரிவாக்கபகுதி உருவாகியுள்ளது. காந்தி நகர் சர்விஸ் ரோட்டில் இருந்து இந்தப் பகுதிக்குச் செல்ல ரோடு வசதி இல்லை. ரோடு போடுவதற்கான பாதை இருந்தும் நகராட்சி அதற்கான முயற்சி எடுக்கவில்லை. சர்வீஸ் ரோட்டில் இருந்து நேதாஜி நகர் வழியாக 30 அடி பாதை உள்ளது. இந்த பாதை ஆத்திபட்டி அருகே உள்ள செம்பட்டி ரோட்டை சந்திக்கும் வகையில் உள்ளது. இந்த பாதையில் ரோடு அமைத்தால் காந்திநகர் மெயின் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும், புறநகர் பகுதி மக்களுக்கும் வசதியாக இருக்கும்.
மழைக்காலமானால் இந்தப் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறி விடுகிறது. ரோடு இல்லாததால் சேற்றில் நடக்க முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் அவசரத்திற்கு வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
குடிநீர், தெரு விளக்குகள், வாறுகால் வசதி உட்பட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. இந்தப் பகுதியில் நகராட்சி பூங்காவிற்கு என தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது அதில் நகராட்சி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடம் ஆக்கிரமிப்பு செய்யப்படும் நிலையில் உள்ளது.
இந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. பகல் நேரத்தில் கூட குடிமகன்கள் ஆங்காங்குள்ள மரங்களின் கீழ் குடித்துவிட்டு போதையில் தள்ளாடுகின்றனர். இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பயத்துடன் செல்ல வேண்டியுள்ளது.
இந்தப் பகுதிக்கு ஒரே சர்வீஸ் ரோட்டில் உள்ள மழை நீர்வரத்து ஓடை ஆங்காங்கு சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மழைநீர் ஓடை வழியாக செல்ல முடியாமல் அருகில் உள்ள பிளாட்டுக்களில் தேங்கி வெள்ளம் சூழ்ந்து விடுகிறது. புறநகர் பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து பெறுவதில் நகராட்சி மெத்தனம் காட்டுகிறது. இந்தப் பகுதி கவுன்சிலர் எட்டி கூட பார்ப்பது இல்லை.
ரோடு அவசியம்
தமிழ்செல்வி, குடும்பத்தலைவி : நேதாஜி நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. முக்கிய பிரச்சனையே ரோடு தான். ரோடு இல்லாமல் இந்தப் பகுதி மக்கள் சிரமப்பட்டு செல்கின்றனர். மழை காலமானால் வெள்ளம் சூழ்ந்து தீவாக மாறி விடுகிறது. இந்த பகுதிக்கு ரோடு அமைத்து தர வேண்டும்.
தெருவிளக்கு அவசியம்
ரதி, குடும்பத்தலைவி: நேதாஜி எக்ஸ்டென்ஷன் பகுதி வழியாக செம்பட்டி, புலியூரான், ஆத்திப்பட்டி மற்றும் புறநகர் பகுதி மக்கள் வந்து செல்கின்றனர். இரவு பகல் எந்த நேரமும் ரோட்டில் வாகனங்கள் வந்து செல்லுகின்றன. இரவு நேரங்களில் திருவிளக்கு இல்லாமல் இந்த பகுதி முழுவதும் இருட்டாக இருக்கிறது. ரோடு இல்லாததால் மண்பாதையில் செல்ல மக்கள் சிரமப்படுகின்றனர். தெருவிளக்கு, ரோடும் அமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடிப்படை வசதிகள் தேவை
பாண்டிமீனா, குடும்பத் தலைவி : நேதாஜி எக்ஸ்டென்ஷன் பகுதி உருவாகி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்தும் இங்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை.
மழைக்காலமானால் வெள்ளம் சூழ்ந்து விடுகிறது. வெயில் காலத்தில் ரோடு இல்லாமல் மண் பாதையில் நடக்க முடியவில்லை.விரிவாக்க பகுதிகளுக்கு இணைப்பு பகுதியாக இருக்கும் நேதாஜி நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் ரோடு அமைக்க வேண்டும்.