/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பருவமழைக்கு முன் வரத்து ஓடைகளை சீரமைப்பது அவசியம்; ஆக்கிரமிப்பால் கழிவு நீர் தேங்கும் அபாயம்
/
பருவமழைக்கு முன் வரத்து ஓடைகளை சீரமைப்பது அவசியம்; ஆக்கிரமிப்பால் கழிவு நீர் தேங்கும் அபாயம்
பருவமழைக்கு முன் வரத்து ஓடைகளை சீரமைப்பது அவசியம்; ஆக்கிரமிப்பால் கழிவு நீர் தேங்கும் அபாயம்
பருவமழைக்கு முன் வரத்து ஓடைகளை சீரமைப்பது அவசியம்; ஆக்கிரமிப்பால் கழிவு நீர் தேங்கும் அபாயம்
ADDED : ஆக 11, 2024 05:55 AM
மாவட்டத்தில் ஒவ்வொரு தாலுகாவிலும் நீர்வளத்துறை, ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஏராளமான கண்மாய்கள் உள்ளன. தற்போது இந்த கண்மாய்களின் நீர்வரத்து பாதைகளில் கழிவுகள் கொட்டப்பட்டும், ஆக்கிரமிக்கப்பட்டும், கண்மாய் நீர் பிடிப்பு பகுதிகளில் கருவேல மரங்கள் வளர்ந்தும் காணப்படுகிறது.
அதிகரித்து வரும் மக்கள் தொகையால் குடியிருப்புகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில் தற்போது பெரும்பாலான பகுதிகளில் கண்மாய்களை ஒட்டியே வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இதே போல் அதிகரித்து வரும் குப்பையும் கண்மாய் பகுதிகளிலேயே கொட்டப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு பகுதி மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்தால் அப்பகுதி கண்மாய்கள் நிரம்பி மறுகால் விழும் பட்சத்தில் மாவட்டத்தில் கிழக்கு பகுதியான சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்துார் தாலுகா வரையிலுள்ள கண்மாய்களுக்கும், அணைகளுக்கும் தண்ணீர் வரத்து ஏற்படும்.
கடந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக ஸ்ரீவில்லிபுத்துார் வத்திராயிருப்பு பகுதி கண்மாய்கள் நிரம்பி சிவகாசி தாலுகா கன்மாய்களுக்கும் அதிகளவில் தண்ணீர் சென்றது. இதில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்தது. இதற்கு நீர் வரத்து கால்வாய்கள் அடைபட்டதும், ஆக்கிரமிக்கப்பட்டதும், கழிவுகள் கொட்டப்பட்டதும் அடிப்படை காரணமாகும்.
இந்நிலையில் தற்போதும் அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. அதற்கு முன்பாக மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கண்மாய்களின் நீர்வரத்து பாதைகள் சீரமைக்கப்பட வேண்டியது அவசியமாகி உள்ளது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். ஓடைகள் முழு அளவில் துார்வாரப்பட வேண்டும்.
இல்லையெனில் கடந்த ஆண்டை போன்று மீண்டும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கும் அபாயம் ஏற்படும். மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

