/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வன விலங்குகளால் வேண்டாங்குளம் கண்மாய் நிறைந்தும் பயனில்லை
/
வன விலங்குகளால் வேண்டாங்குளம் கண்மாய் நிறைந்தும் பயனில்லை
வன விலங்குகளால் வேண்டாங்குளம் கண்மாய் நிறைந்தும் பயனில்லை
வன விலங்குகளால் வேண்டாங்குளம் கண்மாய் நிறைந்தும் பயனில்லை
ADDED : ஏப் 19, 2024 04:54 AM

சாத்துார்: சாத்துார் வேண்டாங்குளம் கண்மாய் நிரம்பி வழியும் நிலையில் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
சாத்துார் - நென்மேனி ரோட்டில் அமைந்துள்ளது வேண்டாங்குளம் கண்மாய். சாத்துார் ரயில் நிலையம் அருகில் உள்ள இந்த கண்மாய் தண்ணீரை ஆங்கிலேயர்கள் ரயிலில் நீராவி எஞ்ஜின் பயன்படுத்தப்பட்ட போது நீராவி இஞ்சினுக்கு தேவையான தண்ணீரை நிரப்புவதற்காக வேண்டாங் குளம் கண்மாய் வெட்டப்பட்டதாக கூறப்படுகிறது. பல நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கண்மாய் முழுவதுமாக நிரம்பினால் கடல் போல் காட்சி தரும்.
வேண்டாங்குளம் கண்மாய் பாசனத்தின் மூலம் அணைக்கரைப்பட்டி, ஆலம்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் பாசன வசதி பெற்று வந்தனர். இரு போகம் நெல் விளைந்த இந்தப் பகுதியில் பருவமழை பொய்க்கும் காலத்தில் நெல்லுக்கு மாற்றாக மற்ற பயிர்களை விவசாயம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் அனைக்கரைப்பட்டி, ஆலம்பட்டி, கத்தாழம்பட்டி, உள்ளிட்ட காட்டுப் பகுதியில் தற்போது காட்டுப்பன்றிகள், மான்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதனால் வேண்டாங்குளம் . கண்மாய் சுற்றியுள்ள விவசாய நிலங்களில் இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள், மான்கள் விவசாய நிலத்திற்குள் புகுந்து பயிர்களை தின்று நாசம் செய்து விடுவதால் இந்த பகுதி விவசாயிகள் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இருபோகம் நெல் விளைந்த இந்தப் பகுதியில் தற்போது ஒருபோக நெல் பயிர் கூட சாகுபடி செய்ய முடியாத நிலை உள்ளது. தற்போது சிறிதளவு விவசாயம் செய்யும் விவசாயிகள் கூட விடிய விடிய தங்கள் நிலத்தில் பயிருக்கு காவல் காக்கும் நிலை உள்ளது. கண்மாயில் தண்ணீர் நிரம்பி வழிந்த போதும் தங்களால் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக இப்பகுதி விவசாயிகள் புலம்புகின்றனர்.
அணைக்கரைப்பட்டியை சேர்ந்த கருப்பையா விவசாயி கூறியதாவது: காட்டு மான்கள், காட்டு பன்றிகள் இரவு நேரத்தில் விவசாய நிலத்திற்குள் புகுந்து பயிர்களை தின்று நாசம் செய்து விடுகின்றன. இதனால் விவசாயிகள் வயற்காட்டு பகுதியில் மின்விளக்குகளை எரிய விட்டும் ரேடியோ உள்ளிட்ட கருவிகள் மூலம் ஒலி எழுப்பியும் தூக்கம் இன்றி தங்கள் பயிர்களை காப்பாற்றும் நிலை உள்ளது.
கண்மாய் நிரம்பி உள்ள போதும் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். வனத்துறையினர் விவசாயத்தை காப்பாற்ற காட்டு மான்,,் காட்டுப் பன்றிகளை பிடித்து அகற்ற வேண்டும். என்றார்.

