/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பேராசிரியை நிர்மலாதேவி வழக்கின் தீர்ப்பு ஏப்.29க்கு ஒத்திவைப்பு
/
பேராசிரியை நிர்மலாதேவி வழக்கின் தீர்ப்பு ஏப்.29க்கு ஒத்திவைப்பு
பேராசிரியை நிர்மலாதேவி வழக்கின் தீர்ப்பு ஏப்.29க்கு ஒத்திவைப்பு
பேராசிரியை நிர்மலாதேவி வழக்கின் தீர்ப்பு ஏப்.29க்கு ஒத்திவைப்பு
ADDED : ஏப் 27, 2024 01:54 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:கல்லுாரி மாணவிகளை தவறாக வழி நடத்தும் வகையில் அலைபேசியில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி ஆஜராகாததால், தீர்ப்பு ஏப்., 29க்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்று நீதிமன்றத்தில் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என நீதிபதி பகவதி அம்மாள் அறிவித்தார்.
2018ல் கல்லுாரி மாணவிகளை தவறாக வழி நடத்தும் வகையில் அலைபேசியில் பேசியதாக நிர்மலாதேவி, மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மீது அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டு அப்போதைய எஸ்.பி.,யும், தற்போதைய தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரிய ஐ.ஜி.,யுமான ராஜேஸ்வரி விசாரணை நடத்தி ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். பின்னர் இந்த வழக்குமகளிர் விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது.
மார்ச் 14 ல் ஐ.ஜி., ராஜேஸ்வரி சாட்சியமளித்தார். ஏப்.,1ல் இறுதி கட்ட வாதங்கள் நடந்தன. ஏப்.,26ல் இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி பகவதி அம்மாள் அறிவித்திருந்தார்.அதன்படி நேற்று காலை நீதிமன்றம் கூடிய போது அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் சந்திரசேகர், சி.பி.சி.ஐ.டி. போலீசார், பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். நிர்மலா தேவி ஆஜராகவில்லை.
அவரது தரப்பில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவை அனுமதித்த நீதிபதி பகவதி அம்மாள், தீர்ப்பை ஏப்., 29க்கு ஒத்தி வைத்தார். அன்று ஆஜராகாவிட்டால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என எச்சரித்தார்.
தீர்ப்பினை முன்னிட்டு நேற்று நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

