ADDED : ஆக 29, 2024 04:46 AM

சாத்துார்: துார் வாராத நீர் வரத்து ஓடை, சேதமான மதகுகள்,புதர் மண்டி, மண் மேவி தண்ணீர் தேக்க முடியாமல் பெத்து ரெட்டி பட்டி கண்மாய் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
சாத்துார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெத்து ரெட்டி பட்டி கண்மாய்க்கு ஏழாயிரம்பண்ணை, சங்கரபாண்டியாபுரம், ஓ.மேட்டுப்பட்டி, கண்மாய் சூரங்குடி, சின்னத்தம்பியாபுரம் ஆகிய கிராமங்கள் வழியாக கண்மாய்க்கு நீர் வரத்து கால்வாய் அமைந்துள்ளது.
பல ஆண்டுகளாக நீர் வரத்து கால்வாய் துார்வாரப்படாததால் நீர் வரத்து கால்வாய் முழுவதும் முள் செடி அதிக அளவில் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது. இதன் காரணமாக பெரும் மழை பெய்தாலும் மிகக் குறைந்த அளவு தண்ணீர் தான் கண்மாய்க்கு வந்து சேருகிறது.
கண்மாயின் நீர் பிடிப்பு பகுதி முழுவதிலும் முள் செடி அதிக அளவில் வளர்ந்து உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு கண்மாயில் துார் வாரும் பணி நடந்தது. அதன் பின் நடைபெறவில்லை.
தற்போது கண்மாய் கரை முழுவதும் முள் செடி,பார்த்தீனியம் செடி முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது. கண்மாயின் பாசன மதகுகள் இருக்கும் இடம் தெரியவில்லை.
மேலும் நீர் பாசன கால்வாயும் துார்ந்து இடிந்து போன நிலையில் உள்ளது. மதகுகளை திறந்தாலும் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல முடியாத நிலையில் காணப்படுகிறது.
நெல் விளைந்த பூமியில் விவசாயிகள் மக்காச்சோளம் பயிர் செய்து வருகின்றனர். மீண்டும் நெல் விவசாயம் நடைபெறும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாசனகால்வாய் தேவை
வேல்ச்சாமி, விவசாயி: கண்மாயில் 2 மதகுகள் உள்ளன. பாசன கால்வாய்முற்றிலுமாக சேதம் அடைந்து விட்டது. புதியதாக பாசன கால்வாய்அமைக்க வேண்டும். முள் செடி அதிக அளவில்வளர்ந்துள்ளது. மண் மேவி உள்ளதால் மிகக் குறைந்த அளவு தண்ணீர் தான் தேங்குகிறது. இந்தத் தண்ணீரை வைத்து நெல் பயிர் செய்ய முடியாது. மக்காச்சோளம்,உளுந்து, பயறு வகைகள் விளைகிறது.
வரத்துக் கால்வாய்சீரமைக்க வேண்டும்
பரமசிவம், விவசாயி: சின்னத்தம்பியாபுரத்தில் இருந்து பெத்துரெட்டி பட்டி கண்மாய் வரையிலான நீர்வரத்து கால்வாய் முழுவதும் முள்செடி அதிகளவில் வளர்ந்துள்ளது. மழை நீர் கண்மாயை அடைவதற்குள் வற்றி விடுகிறது. எங்கள் நிலம் கண்மாய் பாசனம் செய்யமுடியாமல்மானாவாரி நிலமாகிவிட்டது. நீர் வரத்து கால்வாயை சீரமைக்க வேண்டும்.
ஆழப்படுத்த வேண்டும்
பெருமாள், விவசாயி: கண்மாய் முழுவதும் மணல்மேவி உள்ளது. மேலும் கடந்த முறை தூர்வாரியபோது வெட்டப்பட்ட முள் செடிகளை முழுமையாக அகற்றாமல் அப்படியே போட்டு விட்டு சென்று விட்டனர்.
இதன் காரணமாக அவை மக்கி மீண்டும் மண்ணாகி விட்டதால் கண்மாயின் ஆழம் குறைந்து விட்டது. கண்மாயை ஆழப்படுத்தினால் இப்பகுதியில் விவசாயம் செழிக்கும்.